முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்யும் கட்டளை ஒன்றைப் பிறக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் அவருடைய சகோதரர் பதியுதீன் ரியாஜ் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களின் விசாரணை உயர் நீதிமன்றத்தால் ஜூன் மாதம் 23ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இம்மனுக்களை விசாரணை செய்வதற்காக எல்.ரி.பி டேஹிடேனிய, ஜெ.பிரிதி பத்மன் சூரசேன, சீரான் கூரத்ன ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இம்மனுக்கள் கவனத்தில் எடுக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவருடைய சகோதரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் பயாஸ் முஸ்தப்பா மற்றும் அணில் சில்வா ஆகியோர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் ஆலோசனைக்கமைய ஆஜராகினர்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பயாஸ் முஸ்தப்பா, புலனாய்வு தொடர்பான பல ஆவணங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருப்பதாகவும், அவைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான கட்டளை ஒன்றைப் பிறப்பிக்குமாறு நகர்த்தல் பத்திரம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
இவ்விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிடர் ஜெனரால் மாதவ தென்னகோன் மனுதாரர்கள் கோரியுள்ள ஆவணங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருக்குமேயானால் அவைகளை அடுத்த ஒருவார காலத்தில் நீதிமன்றுக்கு கோவையிடுவதாக அறிவித்தார்.
இதன்படி இம்மனுக்களை விசாரணை செய்வதற்கு ஜூன் மாதம் 23 ம் திகதி வரை இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் சித்திரை மாதம் 24 ஆந் திகதி அதிகாலையில் எவ்விதமான நியாயமான காரணங்களும் கூறாமல் தாங்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றார்கள்.
தங்களைக் கைது செய்தமை தொடர்பில் எவ்விதமான நியாயமான காரணம் எதுவும் காட்டுவதற்குத் தவறியுள்ளதால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட கைது தொடர்பில் தங்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பொன்றை வழங்குமாறும் தாங்கள் தடுத்து வைக்கப்படுவதற்காகப் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்பு வைப்புக் கட்டளையை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் எவ்வாறான நிபந்தனைகளுமின்றி தங்களை விடுவிப்பதற்கான கட்டளையைப் பிறப்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் அவரது சகோதரரும் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுக்களில் கோரியுள்ளனர்.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri