ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த கேன் வில்லியம்சன்! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்..
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் தலைவருமான கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் நீடித்த அவரது சர்வதேச கிரிக்கெட் பயணம், அனைத்து வடிவங்களிலும் 378 போட்டிகளில் விளையாடியதன் மூலம் நிறைவுக்கு வந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி பங்கேற்று வரும் நிலையில், லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியே வில்லியம்சனின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்துள்ளது.
முதல் போட்டியில் தோல்வியடைந்து தொடரில் 1-0 என பின்தங்கியுள்ள நியூசிலாந்து அணிக்காக அவர் இனி தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேன் வில்லியம்சன்
ஓய்வு குறித்து கருத்து வெளியிட்ட வில்லியம்சன், “நான் இந்த முடிவைப் பற்றி நீண்ட காலமாக யோசித்து வந்தேன். ஆனால் கடந்த சில நாட்களில், இதுவே சரியான நேரம் என்பது தெளிவாக உணரப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட்டின் மீதான ஆர்வமும் பசியும் என்னிடம் எப்போதும் இருந்தது.
One of our greatest ever, signing off.
— BLACKCAPS (@BLACKCAPS) June 12, 2026
Kane Williamson has announced his retirement from international cricket effective immediately.
Head to https://t.co/Pm8RiU65zt to read more. pic.twitter.com/e22MeZ410e
நியூசிலாந்துக்காக விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் என்னால் முடிந்த அனைத்தையும் வழங்கியுள்ளேன் என்ற பெருமை எனக்கு உள்ளது.
அதற்குக் குறைவாக தொடர்வது சரியாக இருக்காது. எனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுக்க முடிந்தது எனக்கு கிடைத்த ஒரு பாக்கியம்.
இந்த அணி எதிர்காலத்தில் எதைச் சாதிக்கப் போகிறது என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். திறமையான வீரர்கள் நிறைந்த இந்த அணிக்கு சிறப்பான ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகமாக உள்ளது.
நான் மிகவும் நேசிக்கும் அணிதான் இது. இவ்வளவு காலம் இந்த அணியின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். இந்த அணி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானதாகவே இருக்கும்” என்றார்.
கிரிக்கெட்டின் உண்மையான தூதுவர்
2016 முதல் 2024 வரை எட்டு ஆண்டுகள் நியூசிலாந்து அணியின் தலைவராகச் செயல்பட்ட வில்லியம்சன், 2021ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற அணியை வழிநடத்தியதுடன், 2019 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2021 இருபதுக்கு-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளுக்கும் அணியை அழைத்துச் சென்றார்.
அவரது ஓய்வு குறித்து நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ராப் வால்டர், “கேன் எப்போதும் அணிக்கே முதலிடம் கொடுத்தவர். அவர் விலகுவது வருத்தமளித்தாலும், தனது முடிவில் திருப்தியாகவும் அமைதியாகவும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அவர் ஒரு அற்புதமான வீரர், சிறந்த அணித்தோழர், சிறப்பான தலைவர் மற்றும் கிரிக்கெட்டின் உண்மையான தூதுவர்” என்று பாராட்டினார்.
அதேவேளை, நியூசிலாந்தின் முன்னாள் தலைவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சர் ரிச்சர்ட் ஹாட்லீ, “கேன் ஒரு சிறந்த வீரர் மட்டுமல்ல, மிகச்சிறந்த தலைவரும் ஆவார்.
மூன்று வடிவங்களிலும் தனது ஆட்டத்தை தொடர்ந்து மேம்படுத்திய அவர், தனது தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராக தனது பயணத்தை நிறைவு செய்கிறார்” என புகழாரம் சூட்டியுள்ளார்.
2010ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசி சர்வதேச அரங்கில் தனது வருகையைப் பதிவு செய்த வில்லியம்சன், பின்னர் நியூசிலாந்தின் நம்பிக்கையான துடுப்பாட்ட வீரராக உயர்ந்தார்.
அமைதியான தலைமைத்துவம்
அவர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நியூசிலாந்தின் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக நிறைவு செய்கிறார். அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 19,346 ஓட்டங்களைப் பெற்றுள்ள அவர், 48 சதங்களையும் ஆறு இரட்டைச் சதங்களையும் பதிவு செய்துள்ளார்.
110 டெஸ்ட் போட்டிகளில் 9,515 ஓட்டங்களை 54.06 என்ற சராசரியில் குவித்துள்ள அவர், 33 சதங்கள் மற்றும் 38 அரைச்சதங்களைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், 175 ஒருநாள் போட்டிகளில் 7,256 ஓட்டங்களை 48.69 என்ற சராசரியில் குவித்ததுடன், 15 சதங்கள் மற்றும் 47 அரைச்சதங்களையும் அடித்துள்ளார்.

அவரது ஓய்வு காரணமாக, அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரிலும் அவர் பங்கேற்கமாட்டார்.
நியூசிலாந்தின் ஆறாவது அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரராக விளங்கும் வில்லியம்சன், நான்கு முறை சர் ரிச்சர்ட் ஹாட்லீ பதக்கத்தையும், 2019ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் வென்றுள்ளார்.
அமைதியான தலைமைத்துவம், நேர்த்தியான துடுப்பாட்டம் மற்றும் விளையாட்டு நாகரிகத்தால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த கேன் வில்லியம்சன், நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக என்றும் நினைவுகூரப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri