முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய ஊழல் தொடர்பில் ஆரம்பமான விசாரணை
முல்லைத்தீவு (Mullaitivu) ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்று வந்த ஊழல் மோசடிகள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் மட்டத்திலான விசாரணைகள் நேற்றைய தினம் (25) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று காலை முதல் மாலை வரை விசாரணைகள் நீண்டு சென்றிருந்ததோடு மோசடிகளுக்கு எதிராக குரல்கொடுத்து வந்தவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது.
வடமாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவின் பணிப்பிற்கமைய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அடிப்படை வசதிகள் கூட சரிவர பூர்த்தி செய்யப்படாத ஒட்டுசுட்டான் பிராந்திய தாய்ப்பாடசாலையாக மு/ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம் இருக்கின்றது.இந்த நிலையில் இப்பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பாடசாலைச் சமூகம் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்திருந்தமை இங்கே நோக்கத்தக்கது.
வலயக்கல்விப் பணிப்பாளர்
இந்த விசாரணைக் குழுவினால் துணுக்காய் வலயக் கல்விப்பணிப்பாளர் மாலதி முகுந்தன் முதல் நபராக அழைக்கப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.
வலயக்கல்விப் பணிப்பாளரிடம் காலை பத்து மணி முதல் நண்பகல் பன்னிரண்டு முப்பது மணிவரை வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தது.
மாவட்ட அரசாங்க அதிபரின் விசாரணைக் குழுவில் வாக்குமூலம் வழங்கிய வலயக் கல்விப்பணிப்பாளரின் கூற்றுக்கள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவற்றையும் பெற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வலயக்கல்விப் பணிப்பாளர் செய்த விசாரணை
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்று வந்த நிதி மோசடிகள் மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைய அவரால் விசாரணை செய்யப்பட்டு முழுமைப்படுத்தப்பட்ட அறிக்கை வடமாகாண கல்வித் திணைக்களத்திற்கு முன்னர் அனுப்பப்பட்டு இருந்து.
அவ்வாறிருந்த போதும் அவர்களால் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் சார்பாகவும் சுட்டிக்காட்டல்கள் தொடர்பிலும் எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாடசாலை அபிவித்திச் சங்க செயலாளர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டிருந்தனர்.
அந்த அறிக்கையில் விசாரணைக் குழுவினால் சில பரிந்துரைகளும் முன் வைக்கப்பட்டு இருந்ததாக அது தொடர்பான தேடலின் மூலம் பெறப்பட்ட உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தின் அதிபர் நகேந்திரராசா மீது மற்றொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றதனையும் அவதானிக்கலாம்.
வலயக்கல்விப் பணிமணையில் அனுமதி பெற்று பாடசாலையில் முன்னெடுக்க வேண்டிய பல செயற்பாடுகளை வலயக் கல்விப் பணிமனையின் உரிய அனுமதிகளைப் பெறாது செயல்படுத்தி வருகின்றார்.இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல முன்னுதாரணமாக அமையாது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
செயலாளர்கள் வாக்குமூலம்
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றிருந்த ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்று வந்ததான மோசடிகளை ஆராயும் விசாரணைக் குழுவில் பாடசாலையின் இரு செயலாளர்கள் தங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஆகியோர் தங்கள் வாக்குமூலங்களையும் பதிவு செய்திருந்தனர்.
பாடசாலையின் நடைபெற்று வரும் நிர்வாக முறைகேடுகள் மற்றும் பாடசாலை அதிபரின் பொறுப்பற்ற செயற்பாடு, பாடசாலையின் நடைபெற்றதான நிதி மோசடிகள் என அவர்களது முறைப்பாட்டின் அடிப்படையில் இன்றைய அவர்களது வாக்குமூலம் அமைந்திருந்ததாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நண்பகல் கடந்து இரண்டு மணி முதல் மாலை நான்கு மணிவரை இவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தகவலறியும் சட்டம்
இவர்களுடன் தகவலறியும் சட்டத்தின் உதவியுடன் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்று வந்த மற்றும் வரும் முறைகேடுகள் தொடர்பில் பாடசாலையின் நலன் சார்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலர் ஒருவரும் தன் வாக்கு மூலத்தினை பதிவு செய்து இருந்ததாகவும் அறிய முடிகின்றது.
பாடசாலையின் செயற்பாடுகள் சிலவற்றில் தெளிவற்ற மற்றும் ஒழுங்கின்மையினை உணர்ந்த போது அது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினவியிருந்ததாகவும் அதன் போது தன் வினாவலுக்கு பாடசாலையின் அதிபரான நாகேந்திரராசா அதற்கு உரிய பதில்களை தெளிவாக வழங்காதிருந்தார்.
அதனையடுத்து இது தொடர்பான உண்மையினை கண்டறியும் நோக்கத்தில் தகவலறியும் சட்டத்தின் உதவியை நாடியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்ததும் நோக்கத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |