மன்னாரில் வீதிகளில் மீன் வலைகளை உலரவிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மன்னார் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கும், வீதிகளில் பயணிப்போருக்கும் இடையூறாக மீன் வலைகளை ஆபத்தான முறையில் உலரவிடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் ஜீவபுரம், ஜிம் ரோன் நகர், எமில் நகர், சாந்திபுரம் பனங்கட்டு கொட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் சில கடற்றொழிலாளர்கள் வீதிகளில் வலைகளை ஆபத்தான முறையில் உலர விடுவதால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
பொதுமக்களிடையே பெரும் கவலை
குறித்த செயல்பாட்டைக் கைவிடுமாறு நகரசபையால் பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, சிலர் அவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீதிகளில் வலைகளை உலர விட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி, வலைகளை அகற்றுமாறு அறிவுறுத்தும் போது, “வலைகளை உலர விட வேண்டாம் என்றால் வேறு எங்கே உலர விடுவது?” எனக் கேள்வி எழுப்பி, தமது செயல்பாட்டை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீதிகளில் கிடக்கும் வலைகளில் சிக்கி விழும் சம்பவங்களும் தொடர்ச்சியாக மன்னாரில் பதிவாகி வருகின்றன.
கடந்த வருடம் கர்ப்பிணித் தாய் ஒருவர் வலையில் சிக்கி விழுந்ததாகவும், நேற்று சிறுமி ஒருவரும் வலையில் சிக்கி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, வீதிகளில் மீன் வலைகளை உலர விடுவதை உடனடியாக நிறுத்துமாறு மன்னார் நகர சபையால் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இனி வரும் காலங்களில் இவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



