அமெரிக்கா - ஈரான் இடையே பல மாதங்களின் பின்னர் மறைமுகப் பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கில் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பல மாதங்களின் பின்னர் முதன்முறையாக மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடருக்கு மத்தியில், கட்டார் மத்தியஸ்தம் மூலம் இருதரப்புப் பிரதிநிதிகளும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் கட்டார் பிரதமருடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி தமது நிபந்தனைகளைத் தூதுவர்கள் ஊடாக அமெரிக்காவிற்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

அனைத்து முனைகளிலும் இடம்பெறும் போரையும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே ஈரானின் முதன்மை நிபந்தனையாகும்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த உரையாடல்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், உடன்பாடொன்றை எட்டுவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவை தடை விதித்துள்ளதால், இக்கலந்துரையாடல்கள் மத்தியஸ்தர் மூலமாகவே முன்னெடுக்கப்படுகின்றன.
ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஜூலை மாதத்தில் ஏற்பட்ட பிணக்கைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்த உடன்பாடு முறிந்திருந்தது.
தற்போது மீண்டும் இராஜதந்திர கதவுகள் திறக்கப்பட்டுள்ள போதிலும், ஈரானின் தீவிரப்போக்கு ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் இந்த பேச்சுவார்த்தைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.