புலம்பெயர் நாடு ஒன்றில் இரு குழந்தைகள் கொலை! உயிரிழந்த இலங்கையருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அவுஸ்திரேலியாவில் தமது இரண்டு குழந்தைகளை கொலை செய்த பின்னர், தமது உயிரை மாய்த்துக்கொண்ட இலங்கையருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திக குணதிலக்க என்ற இந்த இலங்கையர், அவுஸ்திரேலிய பெண்ணான தமது மனைவிக்கு எதிரான குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த இரண்டு குழந்தைகளின் தாய் கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றில் குடும்ப வன்முறை தடை உத்தரவை கோரியிருந்தார் என்பது இப்போது தெரியவந்துள்ளது,
இது கடந்த செப்டம்பரில் இரண்டு ஆண்டு உத்தரவு வடிவத்தில் இறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உத்தரவின்படி இந்திக குணதிலக்க, துப்பாக்கி உரிமம் அல்லது துப்பாக்கி உரிமம் பெறுதல் தொடர்பாக எவருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தமது மனைவியை அச்சுறுத்தும் வகையில், புண்படுத்தும் வகையில் அல்லது உணர்ச்சி ரீதியில் துஷ்பிரயோகம் செய்யும் விதத்தில் நடந்து கொள்ளக்கூடாது, அல்லது 20 மீற்றருக்குள் அவரை நெருங்கக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நடைமுறைகளை மீறாதிருந்தால், இந்திக குணதிலக்கவுக்கு தமது குழந்தைகளை பார்ப்பதற்கான அனுமதியையும் நீதிமன்றம் தமது உத்தரவில் வழங்கியிருந்தது. மாறாக இரண்டு வருடங்களுக்குள் குறித்த உத்தரவுகளை மீறினால், இந்திக குணதிலக்கவுக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தமது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.



