இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய கடற்றொழிலாளர்கள்!நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்த இந்திய அரசு முயற்சிக்கவில்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (5.1.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய கடற்றொழிலாளர்கள் விடயங்கள் தொடர்பாகவும் அவர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாகவும் போராட்டங்களை மேற்கொண்டு இருக்கின்றோம்.
பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறோம்.கட்டுப்பாட்டு விடயங்களில் அரசுக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளோம்.ஆனால் இன்று வரை அந்த செயல்பாடு தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.
இலங்கை அரசும்,இலங்கை கடற்படையும் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்த நினைத்தாலும்,மறு புறம் தமிழ்நாடு அரசானது ஒத்துழைப்பை வழங்குவதில்லை.
அண்மையில் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட போது தமிழக முதலமைச்சர் மத்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்ற சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்திருந்தார்.
தமிழக கடற்றொழிலாளர்கள்
அவர் எதிர்கால அரசியலை மையமாக வைத்து இந்த ஆண்டில் வரக்கூடிய தமிழ் நாட்டின் அரசை மையப் படுத்தியதாக அவரது செயற்பாடுகள் இருக்கிறது.
ஆனால் ஒரு தரம் கூட அவர் தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் செல்வதை தடுப்பதற்கான எந்த அறிவிப்புகளையும் கொடுத்ததாக இல்லை.

குறிப்பாக நாங்கள் இந்த வேளையிலே தமிழக கடற்றொழிலாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம். தயவுசெய்து நீங்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வராதீர்கள். தடை செய்யப்பட்ட தொழில் முறையை செய்யாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
