வடக்கு கடல் பரப்பில் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்கின்றது என ஆதங்கம்
வடக்கு கடல் பரப்பில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக பல நூற்றுக்கணக்கான இந்திய கடற்தொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கை முன்னெடுப்பதன் காரணமாக எமது கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபா பெறுமதியில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
இந்த கடற்தொழிலாளர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு யார் பொறுப்பு கூறுவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (03.11.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கடற்தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள்
மேலும் தெரிவிக்கையில், வடக்கில் இருக்கின்ற, குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற கடற்தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஊடக வாயிலாக விடயங்களை கொண்டு வர வேண்டிய தேவை இருக்கின்றது. குறிப்பாக நாங்கள் இந்திய கடற்தொழிலாளர்களின் வருகை தொடர்பாக தொடர்ந்து நீண்ட காலமாக பேசி வருகின்ற விடயங்களுக்கு அப்பால், தொடர்ச்சியாக இந்த 10 தினங்களுக்குள் மன்னார் மாவட்டமும் சரி, யாழ் மாவட்டத்திலும் இருக்கின்ற கடற்தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் காணப்படுகின்றார்கள்.
இந்திய கடற்தொழிலாளர்கள் என்று நாங்கள் சொல்லும் போது, தமிழக கடற்தொழிலாளர்கள் மாத்திரமல்ல, இப்போது பாண்டிச்சேரி, காரைக்கால் கடற்தொழிலாளர்களும் எங்களது கடல் வளத்தை நோக்கி வருகை தருவது மாத்திரமல்லாமல், அதனை சீரழித்து அள்ளிச் சென்று, இங்கு இருக்கின்ற கடற்தொழிலாளர்களின் வலைகள், அதன் உபகரணங்களை நாசமாக்கிய சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகிக் கொண்டு இருக்கிறது. அண்மையில் கூட ஒரு குரல் பதிவாக ஒரு கடற்தொழிலாளர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
எனவே,இவ்வாறான நிகழ்வுகள் நடந்திடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். ஏனெனில்,இவ்வாறு நிகழ்வு இரண்டு நாட்டுக்கும் அல்லது இரண்டு உறவுகளுக்குமான உறவை துண்டிக்க செய்துவிடும் என்பதில் நாங்கள் மிகக் கவனமாக இருக்கிறோம். எனவே, இந்த விடயத்திலே அண்மையில் நடந்த விடயங்களை நான் முன் கொண்டு வருவதாக இருந்தால், மன்னார் மாவட்டத்தில் தலைமன்னாரில் இருந்து தொழிலுக்குச் சென்ற 65 கடற்தொழிலாளர்களில் 30 பேருடைய வலைகள் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு படகுக்கு 5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரைக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்கப்பால், வாங்காலைப்பாடு, காட்டாஸ்பத்திரி என்று சொல்லக்கூடிய பேசாலை மீனவ சங்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கூட இவ்வாறு அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், தொடர்ந்து நாங்கள் அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது. கடற்படையும் கண்ணை மூடிக்கொண்டு இந்த விடயங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு சாட்டுக்காக என்று சொல்கிற மாதிரி ஒரு படகை கைது செய்தால் மாத்திரம் இந்தப் பிரச்சனை தீர்ந்து விடாது.

கடல் எல்லையை பாதுகாக்குமாறு வலியுறுத்தல்
எங்களது கடல் எல்லையை பாதுகாக்குமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அந்த வகையில், யாழ்ப்பாணம் தொடக்கம் மன்னார் வரைக்கும் இவ்வாறு கடற்தொழிலாளர்களின் வலைகள் அறுக்கப்பட்ட சம்பவம் இந்த 10 நாட்களுக்குள் கோடி ரூபாய்க்கு மேல் பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டு இருக்கின்றன, நாசமாக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கப்பால், முல்லைத்தீவில் சீசன் தொடங்கியிருந்த ரால் சீசனுக்காக இப்போதே இந்திய கடற்தொழிலாளர்கள், காரைக்கால் கடற்தொழிலாளர்கள் அங்கே வருகை தந்து வண்ணம் இருக்கிறார்கள். 500-க்கு மேற்பட்ட படகுகளை தாங்கள் கண்டதாக அங்கு இருக்கின்ற மீனவ சமூகம் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
எனவே, இந்த சூழலில், அண்மையிலே இந்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்ததும், அதற்கப்பால் இந்திய உச்சநீதிமன்றம் தனது கருத்தையும், தனது ஆலோசனையும் முன் வைத்ததையும் தாண்டி, அதனை மதிக்காத வகையில் இங்கு இருக்கின்ற இந்திய கடற்தொழிலாளர்கள் என்று சொல்லக்கூடிய காரைக்கால் கடற்தொழிலாளர்களும், தமிழ்நாட்டு கடற்தொழிலாளர்களும் தாங்கள் நினைத்தவாறு, தாங்கள் கையாளும் விடயத்தை திரும்பத் திரும்ப செய்து வருகிறார்கள். அங்கு யாரையும் அவர்கள் மதிப்பதும் இல்லை.
எனவே, சட்டத்தை மதிக்கக்கூடிய அங்கு போலீஸ்காரர் கூட அதை சொல்கிறார்கள் எல்லையை தாண்டி செல்லாதீர்கள், அங்கு இருக்கின்ற பிரச்சனைகளை அவர்கள் வெளிக்கொண்டு வந்தாலும், அந்த கடற்தொழிலாளர்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.எனவே, தயவுசெய்து நாங்கள் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம், எங்கள் கடல் எல்லைக்குள் வராதீர்கள். இப்போது ஏற்பட்டிருக்கின்ற இழப்புக்கு யார் அந்த கடற்தொழிலாளர்களுக்கான இழப்பை ஈடு செய்வது என்பதில் கேள்வியாக இருக்கிறது.
அவர்களின் பல குடும்பங்கள் இன்று கண்ணீரோடு வாழ்கிறார்கள். கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர் ஒருவருடைய தாய் ஊடகங்கள் ஊடாக தனது கருத்தை முன் வைத்தார். தீபாவளியை கொண்டாட இருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக. அவர் அந்த தீபாவளியை மாத்திரம் கனவு கண்டு கொள்கிறாரே தவிர, இங்கு இருக்கின்ற கடற்தொழிலாளர்கள் தொடர்ந்து வருடங்களாக தங்களது வாழ்வாதாரத்தையும், தங்களது தொழிலையும் இழந்து வருவதை யாரும் கண்டுகொள்வதோ அல்லது அது தொடர்பான கருத்தை கூறுவதற்கு முன்வருவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வீட்டில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டுமா? தீபாவளிக்கு முன்பு இந்த பொருளை தூக்கி போட்டுருங்க Manithan
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan