இந்திய கடற்றொழிலாளர்கள் மரணம்: இலங்கையிடம் கடும் அதிருப்தியை வெளியிட்ட இந்தியா
தமது நாட்டு கடற்றொழிலாளரின் மரணத்திற்கு இராஜதந்திர ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக இலங்கை உயர்ஸ்தானிகருக்கு இந்தியா (India) இன்று அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இலங்கை கடற்படையினர் சம்பந்தப்பட்ட சம்பவத்தில் இந்திய கடற்றொழிலாளர் ஒருவர் இன்று உயிரிழந்ததற்கு, தமது கடும் எதிர்ப்பை பதிவு செய்ய, புதுடில்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
கச்சத்தீவுக்கு வடக்கே 5 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பல் ஒன்றும் இந்திய கடற்றொழில் படகு ஒன்றும் இன்று அதிகாலை மோதி விபத்துக்குள்ளானதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது, படகில் இருந்த நான்கு இந்திய கடற்றொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவரை காணாமல் போயுள்ளார். ஏனைய இருவர் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சு
மேலும், காணாமல் போன இந்திய கடற்றொழிலாளரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உடனடியாக காங்கேசன்துறைக்கு விரைந்து சென்று கடற்றொழிலாளர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த கடற்றொழிலாளரின் உயிரிழப்பு தொடர்பில் இந்தியா அதிர்ச்சியையும் வேதனையையும் இலங்கையிடம் இன்று தெரிவித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரும் இலங்கை அரசாங்கத்திடம் இந்த விடயத்தை தெரியப்படுத்துவார் என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், கடற்றொழிலாளர்கள், தொடர்பான பிரச்சினைகள், மனிதாபிமான முறையில் கையாளப்பட வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
அந்த வகையில், இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே நிலவும் புரிந்துணர்வுகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்.
அத்துடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |