ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு தொடர்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவு
ஜனாதிபதி தேர்தலில் சமஷ்டி கோரிக்கையை முன்வைக்கும் வேட்பாளருக்கே நாம் வாக்களிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்றையதினம் (01.08.2024) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களுக்கு நாம் பகிரங்கமான கோரிக்கையை முன்வைக்கின்றோம். தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும்.
நிலையான அரசியல் தீர்வு
இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நிலையான, கௌரவமான, உரிமைகளுடன் கூடிய நிலையான அரசியல் தீர்வு கோரி 2022 ஆம் ஆண்டு ஆவணி முதலாம் திகதி சுழற்சி முறையிலான 100 நாட்கள் செயல்முனைவினை ஆரம்பித்து, 2022 கார்த்திகை எட்டாம் திகதி சமஷ்டி தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வெளியிட்டோம்.
இன்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டுவரும் அரச இனவாத
அடக்குமுறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக
வாழவேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வே அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |