தலைமன்னாரில் கைதான 38 இந்திய கடற்றொழிலாளர்கள் விடுதலை (Photos)
தலைமன்னார் கடற்பரப்பில் இரு வேறு சம்பவங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் (09.11.2023) வியாழக்கிழமை 38 இந்திய கடற்றொழிலாளர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 16 ஆம் திகதி 2 படகுகளுடன் 15 இந்திய கடற்றொழிலாளர்களும், கடந்த 29 ஆம் திகதி 3 படகுகளுடன் 23 இந்திய கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
குறித்த கடற்றொழிலாளர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்றைய தினம் வியாழக்கிழமை (09.11.2023) மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவு
இதன் போது குறித்த கடற்றொழிலாளர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, குறித்த கடற்றொழிலாளர்களுக்கு 5 வருட ஒத்தி வைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த 5 படகுகளின் உரிமையாளர்களும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு, இந்திய துணைத் தூதரகம் ஊடாக படகு உரிமையாளர்களுக்கு அறிவிக்கும் படி நீதவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடுனரினால் முதலாவது குற்றவாளியாக படகுகளின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட 38 கடற்றொழிலாளர்களும் மிகிரியாகம தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகள் ஊடாக நாட்டிற்கு அனுப்பி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படும் போது அவர்களின் உடமையில் இருந்த சில சான்றுப் பொருட்களை உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு அதிகாரிகளுக்கு நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வழக்கு தொடுனர் சார்பாக அரச சட்டத்தரணி மன்றில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.