கைதான இந்திய கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு
புதிய இணைப்பு
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் 4 படகுகளுடன் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் கோட்டைபட்டினம் பகுதிகளில் இருந்து நேற்றுக் காலை புறப்பட்ட படகுகளே நேற்று மாலை இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்புகளுக்குள் எல்லை தாண்டி உட்புகுந்து மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்பில் ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் மன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கடற்பரப்பில் மூன்று படகுகளுடன் கைதான 14 மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், இன்று மாவட்ட நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இதில் புதுக்கோட்டையை சேர்ந்த 14 பேரும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை தமிழக கடற்றொழிலாளர்களை சிறபிடித்து செல்லும் சம்பவங்களும் படகுகளை பறிமுதல் செய்யும் சம்பங்களும் அடிக்கடி நடைபெற்று வருவதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது
மேலதிக தகவல் - சிவா மயூரி
முதலாம் இணைப்பு
மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்புக்களுக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் மூன்று படகுடன் இன்று (06.12.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று படகுகளுடன் கைது
தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை மூன்று படகுகளில் புறப்பட்ட கடற்றொழிலாளர்களே இன்று மாலை இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்புக்களுக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட வேளையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்பில் ஒரு படகுடன் கைதான தமிழக கடற்றொழிலிலாளர்கள் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதேநேரம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் இரண்டு படகுகளுடன் கைதான தமிழக கடற்றொழிலிலாளர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |