மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு! நிராகரிக்கும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு
வடக்கு - கிழக்கில் தமிழர் பகுதிகளில் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வின் போது விடுதலைப் புலிகள் அமைப்பினரை நினைவுப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தகவல்
எனினும், இது தொடர்பில் லங்காசிறி செய்திப் பிரிவு, ஜனாதிபதி ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொண்டு வினவியபோது இந்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து நாம் அறிந்திருக்கவில்லை எனவும், அவ்வாறான தகவல்கள் எமக்கு வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில் ஆடைகளை அணிந்தமை, அவர்களது சின்னம், கொடிகளை ஏந்தியமை உட்பட்ட பல்வேறு விடயங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், அது விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் தென்னிலங்கையில் இருப்பதால் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி, நீதியமைச்சர் விஜயதாசவையும், பொதுமக்கள் பாதுகாப்பமைச்சர் டிரான் அலசையும் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் உடனடியாக விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
எனினும் இவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |