எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட இலங்கை கடற்தொழிலாளர் ஒருவர் கைது (Video)
இந்தியக் கடலோர பாதுகாப்புப் படையினர் கடலோர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது கண்ணாடி இழை படகு ஒன்றைச் சோதனை செய்த நிலையில், அதிலிருந்த இலங்கை கடற்தொழிலாளர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் - கோடியக்கரை படகுத் துறைமுகத்திலிருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில், நேற்று கப்பலில் சென்று கடலோரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதே கண்ணாடி இழை படகு ஒன்றை அவதானித்துள்ளனர்.
பின்பு அதனை சோதனையிட்ட போது கடற்தொழிலாளர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த படகு இலங்கையை சேர்ந்தது என்றும் அதில் வந்தவர் இலங்கையின் வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் சாந்தரூபன் (வயது 30) என்றும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்திய எல்லையில் தடை மீறி கடற்தொழிலில் ஈடுபட்டதாக இந்தியக் கடலோர காவல் படையினர் படகைக் கைப்பற்றி கடற்தொழிலாளரை கைது செய்தனர்.
கைது செய்த கடற்தொழிலாளரையும், கைப்பற்றிய படகையும் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
படகையும், இலங்கை கடற்தொழிலாளரையும் அழைத்து வர நேற்று மதியம் 2.20 மணிக்குக் கோடிக்கரை படகு துறைமுகத்திலிருந்து பைபர் படகு கடலோர பாதுகாப்புப் படைக் கப்பலை நோக்கிப் புறப்பட்டது.
கடற்தொழிலாளரையும், படகையும் வேதாரணிய காவல்துறை ஆய்வாளரிடம் இந்தியக் கடலோர காவல் படையினர் நடுக்கடலில் ஒப்படைத்தனர்.
இருப்பினும் இலங்கை கடற்தொழிலாளரின் படகில் கடல் நீர் நிறைந்து படகின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கிய நிலையிலிருந்ததால் படகை எடுத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது.
அதன் பிறகு மற்றொரு படகு கோடிக்கரை துறைமுகத்திலிருந்து சென்று இலங்கை கடற்தொழிலாளரின் படகை இழுத்துக் கொண்டு வேதாரணியம் அடுத்த ஆறுகாட்டுத்துறை படகு துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இலங்கை கடற்தொழிலாளர மட்டும் கோடிக்கரை படகு துறைமுகத்திற்கு நேற்று இரவு 8 மணி அளவில் அழைத்து வரப்பட்டார்.
அழைத்து வரப்பட்ட இலங்கை கடற்தொழிலாளரை சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஸ்டெல்லா மேரி,
கடலோர பாதுகாப்பு குழுமக்காவல் கண்காணிப்பாளர் குமார், கடலோர காவல் படை
அதிகாரிகள், மற்றும் கியூ பிராஞ்ச் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.