இலங்கைக்கு இந்தியா கொடுத்த உறுதிமொழி! பொது வெளியில் அறிவித்த அமைச்சர்
இலங்கைக்காக அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இந்தியா உதவி கோர உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… இந்தியாவின் தலைமைத்துவம் எமது நாட்டுக்கு மிகப் பெரிய சக்தியை வழங்குகின்றது.
நிதி ரீதியாக 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் அளவில் உதவி வழங்குகின்றது. நிதி ரீதியாக மட்டுமன்றி இதயபூர்வமாக எமது நேச நாடுகள் எம்முடன் இருக்கின்றன. எமக்கு காணப்படும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது நாம் தனிமைப்படுத்தப்பட மாட்டோம்.
இந்தப் பிரச்சினைகளை நாம் தனித்து எதிர்நோக்க நேரிடாது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எனக்கு ஓர் உறுதி மொழியை வழங்கினார்.
எதிர்வரும் வாரம் அவர் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அங்கு ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்த சந்திப்பின் போது இலங்கைக்கு முடிந்தளவு உதவிகளை வழங்குமாறு இந்தியாவின் சார்பில் தாம் கோரிக்கை விடுக்க உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் என்னிடம் உறுதியளித்தார்.
இது தற்செயலாக நடக்கும் விடயங்கள் அல்ல. எமது வெளியுறவுக் கொள்கை வெற்றிகரமானது என்பதனால் இவ்வாறான வெற்றிகளை எம்மால் ஈட்ட முடிகின்றது என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.