இலங்கைக்கான நான்கு நாள் பயணத்தை நிறைவு செய்கிறார் இந்திய கடற்படை பிரதானி
இந்திய கடற்படை பிரதானி அட்மிரல் ராதாகிருஸ்ணன் ஹரிகுமார் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள நான்கு நாள் பயணத்தை, இன்று திருகோணமலைக்கு செல்வதுடன் முடித்துக் கொள்ளவுள்ளார்.
இந்திய கடற்படை பிரதானியின் பயணம்
ஹரிகுமாரின் பயணத்தில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுடனான பணி சந்திப்புகள், இலங்கை இராணுவ தளங்களின் சுற்றுப் பயணங்கள் மற்றும் இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்களின் முன்னேற்ற ஆய்வுகள் ஆகியவை அடங்கியிருந்தன.
கடந்த ஆண்டில் பல டோர்னியர் கண்காணிப்பு விமானங்கள் மற்றும் கடற்படை மிதக்கும் கப்பல்துறை உட்பட இலங்கைக்கு இந்தியா விரிவான இராணுவ உதவிகளை வழங்கியது.
எவ்வாறாயினும், கடந்த ஆகஸ்ட் மாதம் சீன கடற்படை கப்பல் ஒன்று இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த நிலையில் இரண்டு தரப்புக்கும் முறுகல் நிலை தோன்றியது.
முன்னதாக இந்த கப்பலுக்கு அனுமதி மறுக்கும்படி இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்தது. எனினும் இறுதியில் சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு
இந்த நிலையில் இந்திய கடற்படை பிரதானியின் இந்த விஜயம் இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க வழிவகுக்கும்.
அத்துடன் 2023இல் இந்தியா இலங்கைக்கு அதிக இராணுவ உதவிகளை வழங்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
அதேநேரம் சீனாவின் கடற்படை கப்பல்களும் அடுத்த சில ஆண்டுகளில் இலங்கை துறைமுகங்களில் வரக்கூடும்.
இதன் காரணமாக இந்தியப் பெருங்கடல், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தின்
மற்றொரு ஆதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.