சொந்த மண்ணில் குறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்த இந்தியா
சுற்றுலா நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வரலாற்றில் மீண்டும் ஒருமுறை மோசமான பதிவுக்குள்ளாகியுள்ளது.
பெங்களூரில் நடைபெறும் இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (17.10.2024) ஆரம்பமானது.
இதன்போது, நாணய சுழற்சியில் வென்ற ரோஹித் சர்மா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
இதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா இரண்டு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
தடுமாற்றம்
இந்தநிலையில், விராட் கோலி, சர்பராஸ் கான் ஆகியோர் அடுத்தடுத்து ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்தனர். இந்தவேளையில், இந்திய அணி 10 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த சூழலில் நான்காவது விக்கெட்டுக்காக இணைந்த ஜெய்ஸ்வால் மற்றும் ரிசப் பந்த் ஆகியோர் நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.
எனினும், ஆரம்பவீரர் ஜெய்ஸ்வால் 63 பந்துகளை எதிர்கொண்டு 13 ஓட்டங்களை பெற்றநிலையில் ஆட்டமிழந்தார்.
ரிசப் பந்த் 49 பந்துகளை எதிர்கொண்டு 20 ஓட்டங்களை சேர்த்தபோதும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.
குறைந்தபட்ச ஒட்ட எண்ணிக்கை
இந்தநிலையில், இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவரில் 46 ஓட்டங்களை மாத்திரமே மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்தின் பந்துவீச்சில் மெட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க்கி நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் மூலம், இந்திய மண்ணில் இந்தியா பெற்ற குறைந்தபட்ச ஒட்ட எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா பெற்றிருக்கும் மூன்றாவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும்.
ஏற்கனவே, அடிலெய்டில் 2020ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 36 ஓட்டங்களில், இந்திய அணி ஆட்டம் இழந்தது. 1974 ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதனையடுத்து, துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை எடுத்திருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |