இலங்கை அதிகாரிகளின் செயல்பாடு! கடும் கவலையில் இந்தியா
தமிழகத்தைச் சேர்ந்த 68 மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
அவர்களின் முன்கூட்டிய விடுதலை தொடர்பில் பற்றிய பிரச்சினை கொழும்பில், உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 18 முதல் 20 வரையான காலப்பகுதியில் இலங்கை அதிகாரிகளால் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
அத்துடன் 10 படகுகளும் காவலில் வைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.
அத்துடன் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்திற்கும் ஏற்பாடு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர் ஒருவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் விடயம் தொடர்பில் தமிழக முதல்வருக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
