இந்திய - இலங்கை ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்! சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட கேரள அமைச்சர்
எதிர்வரும் இந்திய - இலங்கை ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் கட்டணம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
இந்திய - இலங்கை ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் கட்டணம் அபரிமிதமானது என பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து
எனினும் முடியாதவர்கள் போட்டிகளை பார்க்கச் செல்ல வேண்டாம் என்ற கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் வி அப்துரஹிமானின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பார்வையாளர்கள் மீது விதிக்கப்படும் கேளிக்கை வரியை உயர்த்துவதாக கூறப்படும் முடிவை திரும்ப பெறுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா என்று செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேட்டபோதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பட்டினியால் வாடுபவர்கள் போட்டியை காண செல்ல வேண்டியதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, ஏழைகளுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்காக அமைச்சர் மீது எதிர்க்கட்சியான காங்கிரஸும், பாரதீய ஜனதாக்கட்சியும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
பொது ஊழியர் இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டிருக்கக் கூடாது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைச்சரை கடுமையாக சாடிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், மாநிலத்தின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் அமைச்சர் வெளியிட்ட இதுபோன்ற முரட்டுத்தனமான மற்றும் அபத்தமான அறிக்கையை கேட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டு பிரியர்களை அவமதிக்கும் செயல்
ஒரு நிமிடம் கூட அந்த நாற்காலியில் அமைச்சரை உட்கார முதல்வர் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டிக்கு விதிக்கப்படும் செங்குத்தான உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பாரதீய ஜனதாவின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
பணம் உள்ளவர்கள் மட்டுமே விளையாட்டைப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் கூறியிருப்பது விளையாட்டு பிரியர்களை அவமதிக்கும் செயலாகும்.
ஐந்தில் இருந்து 12 சதவீதமாக திடீரென கேளிக்கை வரி உயர்த்தப்பட்டமை, மாநிலத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது.
கிரிக்கெட் பிரியர்கள் விளையாட்டைப் பார்க்க ஜிஎஸ்டி உட்பட 30 சதவீத வரியை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் சுரேந்திரன் கூறியுள்ளார்.
குற்றச்சாட்டை நிராகரிக்கும் கேரள அரசாங்கம்
எனினும், போட்டியைக் காண மக்களிடம் அதிகப்படியான வரி விதிக்கப்படுவதாக வெளியான தகவலை கேரள அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் ராஜேஷ், இந்த நிராகரிப்பை வெளியிட்டு உள்ளதுடன், கேளிக்கை வரி உண்மையில் அதிக விகிதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி கேரளாவில் ஜனவரி 15ஆம் திகதியன்று
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.