முல்லைத்தீவு அளம்பிலில் அதிகரித்த தெங்கு பயிர்ச்செய்கை : போருக்கு பின்னர் ஏற்பட்ட பாரிய மாற்றம்
முல்லைத்தீவு(Mullaitivu) அளம்பிலில் தெங்கு பயிர்ச்செய்கையானது அண்மைக்காலமாக பாரியளவிலான அதிகரிப்பைப் பெற்று வருகின்றது.
போருக்கு பின்னர் அளம்பிலில் ஏற்பட்ட பெருமாற்றங்களுள் தெங்கு பயிர்ச்செய்கை முதன்மை வகித்துள்ளது என்றால் அது மிகையில்லை என்று அளம்பில் தெங்குப் பயிர்ச்செய்கையாளர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
தெங்கு உற்பத்தி நாற்றுமேடையும் அளம்பில் பகுதியில் அமைந்துள்ளது.அங்கு வருடம் தோறும் அதிகளவான தென்னம் பிள்ளைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றதும் இங்கே நோக்கத்தக்கது.
புலம் பெயர் முதலீடுகளின் செல்வாக்கும் தெற்கு பயிர்ச்செய்கையில் ஏற்பட்ட மாற்றங்களில் செல்வாக்குச் செலுத்தியுள்ளதாக சமூக அவதானிப்பாளர்கள் சிலர் சுட்டிக் காட்டுவதும் நோக்கத்தக்கது.
தெங்கு பெருந்தோட்டங்களை அதிகம் கொண்ட நிலமாக அளம்பில் பகுதி இருந்துள்ளது.பல தெங்கு பெருந்தோட்டங்களில் உள்ள சோடைத் தென்னைகளை அகற்றி அந்த நிலங்களில் புதிய தென்னம் பிள்ளைகளைகளை நாட்டி வரும் அதே வேளை புதிய நிலங்கள் பலவற்றிலும் தெங்கு பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதையும் அவதானிக்க முடிகின்றது.
பெருந்தோட்டங்கள்
முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் முல்லைத்தீவு நகரில் இருந்து 6.5 மைல் தொலைவில் உள்ள கிராமமாக அளம்பில் கிராமம் உள்ளது.
தென்னை பயிர்ச்செய்கைக்காக பெருமளவு நிலங்களை ஆரம்பத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர்.பெருந்தோட்டங்களாக தென்னை பயிரிடப்பட்டு இருந்தது.அந்த தென்னைகளே இன்று சோடையாகி போயுள்ளன.
அவற்றுக்கு பதிலாக புதிய தென்னம் கன்றுகள் நட்டு வளர்க்கப்படுவதாக தெற்கு பயிர்ச்செய்கையினை மேற்கொண்டு வருபவர்களிடையே மேற்கொண்ட உரையாடலின் போது அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
ஒவ்வொரு தென்னந் தோப்பும் 25 மற்றும் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இவை பெரும் தோட்டங்களாக இருந்து வரும் அதே வேளையில் சில தோப்புக்கள் 25 ஏக்கரிலும் குறைந்தவையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நீண்ட உள்நாட்டு போரினால் பல நிலங்களில் உள்ள தென்னைகள் அழிக்கப்பட்டிருந்ததோடு இன்னும் பல நிலங்கள் காடுகளாக இருந்து வந்துள்ளன.
புதிய தோப்புக்கள்
சிறுபற்றைக் காடுகளாக இருந்து வந்த அந்நிலங்கள் சீராக்கப்பட்டு புதிய தென்னந் தோப்புக்களை உருவாக்கி வருகின்றனர்.
சுமார் 200 ஏக்கரிலும் கூடிய நிலத்தில் புதிய தென்னம் பிள்ளைகளைகளை நாட்டி வளர்த்து வருவதனை அவதானிக்கலாம்.
எதிர்கால நோக்கில் அடுத்துவரும் முப்பதாண்டுகளுக்கு அளம்பில் தெங்கு உற்பத்தியில் அதிக விளைச்சலைத் தரக்கூடிய நிலமாக இருக்கும்.
தென்னை பயிர்ச்செய்கை நிரந்தர வருமானத்தை அவர்களுக்கு வழங்கக்கூடியதாக இருந்து வருவதனை அவர்கள் தங்கள் வாழ்வியல் அனுபவத்தினூடாக அறிந்து வைத்துள்ளனர் என விவசாய ஆசிரியர் ஒருவருடன் மேற்கொண்ட உரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
தென்னைகளை கொண்ட பயிர்ச்செய்கை நிலம் தோப்பு என அழைக்கப்படும். தென்னையின் இளசு பிள்ளை என அழைக்கப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சார்ந்த சொற்கள் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வயதான தென்னைகள் காய்க்கும் திறனை இழந்து விடுகிறது. இவ்வாறான தென்னைகளை சோடைத் தென்னைகள் என அப்பகுதி மக்கள் அழைத்து வருகின்றனர்.
புலம்பெயர் முதலீடுகள்
குறைந்தளவு பராமரிப்போடு இருந்த பல தென்னந் தோப்புக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. புலம் பெயர்ந்து வாழும் மக்களின் முதலீடுகளால் புதிய தென்னந் தோப்புக்கள் உருவாக்கப்பட்டு வருவதும் நோக்கத்தக்கது.
அளம்பிலினை அடுத்துள்ள கிராமங்களில் உள்ள தென்னந் தோப்புக்களை மீள் பயிர்செய்கைக்கு உட்படுத்தி வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.
கீழ்பிள்ளை நடுதல் என்ற முறையிலும் பல தென்னந் தோப்புக்களில் பயிரிடுதல் நடைபெற்று வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
மக்களிடையே இருந்து வந்த பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருந்த தெற்கு பயிரிடல் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் முதலீடுகளால் மாற்றம் பெற்று வருவதாக சமூக விடய ஆய்வாளர் வரதன் இது தொடர்பில் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய மாற்றங்கள் எதிர்காலத்தில் அளம்பில் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு பாரியளவில் உதவியாக இருக்கும். கடற்றொழிலும் தெங்கு பயிர்ச்செய்கையும் இரு பெரும் வருமான மூலங்களாக அளம்பில் பகுதி மக்களுக்கு இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |