உதய கம்மன்பில ஆதரவாக நிற்கிறாரா..! சஜித்தின் நகர்வு தொடர்பில் இம்ரான் எம்.பி அதிருப்தி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் சர்ச்சைக்குரிய நூல் வெளியீட்டு விழாவில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டமைக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கைப்படுதாவது,
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் இந்த நிகழ்வில் பங்கேற்றமை தன்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள இம்ரான் மகரூப், ஒரு மக்கள் பிரதிநிதியாக இதனை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது எனக் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவன் என்ற ரீதியில், கட்சியின் இந்த நகர்வை தனது ஆதரவாளர்களோ அல்லது பொதுமக்களோ எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை.
உதய கம்மன்பிலவினால் வெளியிடப்பட்ட குறித்த நூல் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
சர்ச்சைக்குரிய விடயம்
இவ்வாறானதொரு சர்ச்சைக்குரிய நிகழ்வில் கட்சித் தலைவர் பங்கேற்றது ஆரோக்கியமானதல்ல. ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் அனைத்து இன மத மக்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் கண்டறியப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில் இச்செயற்பாடு அந்த எதிர்பார்ப்பிற்கு முரணானது.
"அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கருதப்படும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் எதிர்கட்சித் தலைவர் சஜித் கலந்து கொண்டதை என்னால் ஒருபோதும் நியாயப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாது என குறிப்பிட்டுள்ளார்.