தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் கொந்தளிப்பு! இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவும் கொந்தளிப்பு, குறைந்த காற்றழுத்த பகுதியாகவும் பின்னர் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவும் உருவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் தாக்கம் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்னகே கூறியுள்ளார்.
எதிர்கால எச்சரிக்கைகள்
அதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்றும் இது தொடர்பாக துல்லியமான முன்னறிவிப்பை செய்வதற்கு போதுமான தரவுகள் இல்லை என்றும், எதிர்காலத்தில் எச்சரிக்கைகள் விடுக்க தேவைப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த குறைந்த காற்றழுத்த பகுதி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகி, கிழக்கு கடற்கரையோரமாக மேலும் வடக்கு பகுதிக்கு நகர்ந்தால், அதன் தாக்கம் நாட்டை கடுமையாக உணரப்படும் என்று அஜித் விஜேமன்னகே வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை திணைக்களம் இன்று காலை (11) அறிவித்துள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்பு
பிற்பகல் 1 மணிக்குப் பிறகு நாட்டின் மற்ற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்துகின்றது.
மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.