முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்
முட்டையின் விலை டிசம்பர் மாதத்திற்குள் 47 முதல் 45 ரூபாய் வரை உயரும் என்று இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் முட்டை உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை சுமார் 20 சதவீதம் அதிகரித்ததன் காரணமாக முட்டையின் விலை படிப்படியாக உயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உற்பத்திச்செலவுகள் அதிகரிப்பு
தற்போது, முட்டை உற்பத்திக்கான செலவு 32-34 ரூபாய்க்கு இடையில் உள்ளது. இருப்பினும், நேற்று (9ஆம் திகதி) பண்ணை விலை 35 ரூபாயாகவும், சந்தை விலை 40 ரூபாயாகவும் இருந்தது என்று அஜித் குணசேகர கூறியுள்ளார்.

உற்பத்திச்செலவுகள் அதிகரித்ததன் காரணமாக ஏற்படும் நஷ்டங்களை ஈடுகட்ட, பண்ணை உரிமையாளர்கள் தங்கள் முட்டையிடும் கோழிகளை இறைச்சிக்காக விற்க முற்படுவதால், முட்டையின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது.
டிசம்பர் மாதத்திற்குள் சுற்றுலா விடுதிகளில் முட்டைகளுக்கான தேவை அதிகரிப்பதால், சந்தை தேவையை பூர்த்தி செய்யும் ஒரு பொருளை வழங்க இயலாமையும் இதற்கு காரணமாகும் என்று இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உணவுகளுக்கு வரி
மக்களுக்கு மானிய விலையில் முட்டைகளை வழங்குவதற்காக, அவற்றின் மீதான வரிகளைக் குறைக்குமாறு இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒரு முட்டைக்கு ரூ. 9 முதல் 11 வரை வரி விதிக்கப்படுவதாகவும், அதே சமயம் கோழி மற்றும் முட்டைகளின் விலையில் 25 சதவீதம் வரியாக விதிக்கப்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
மக்களின் புரத தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யக்கூடிய முட்டை மற்றும் கோழி போன்ற உணவுகளுக்கு வரி விதிக்கக்கூடாது என்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.