நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 39 ட்ரோன்கள் குறித்து மனம் திறந்த நளின் பண்டார
நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் 39 ட்ரோன்கள் மற்றும் 16 மைக்ரோபோன்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார விளக்கம் அளித்துள்ளார்.
நேற்றைய தினம் (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனது குடும்பத்துக்கு சொந்தமான வணிக நடவடிக்கைகளுக்காகவே குறித்த உபகரணங்கள் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும், "எங்கள் குடும்பத்தில் எனது மனைவியும் மகனும் பணிபுரியும், கெமரா மற்றும் ட்ரோன்களை வாடகைக்கு வழங்கும் மற்றும் விற்பனை செய்யும் ஒரு வணிக நிறுவனம் உள்ளது.
உரிய அனுமதி..
அந்த வணிகத்துக்காகவே இந்த ட்ரோன்களும் மைக்ரோபோன்களும் விமான நிலையம் ஊடாகக் கொண்டுவரப்பட்டன.

இதற்குத் தேவையான தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அனுமதியும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அனுமதியும் எமது நிறுவனத்திடம் உள்ளது.
இங்கு ஏற்பட்ட ஒரே ஒரு குறைபாடு என்னவென்றால், பாதுகாப்பு அமைச்சின் முறையான அனுமதி மட்டும் கிடைக்கப்பெறவில்லை.
இங்கு நாங்கள் எதையோ மறைத்துவிட்டதைப் போலவும், சுங்கத்தில் சுங்க அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாகப் பொருட்களைக் கொண்டுவந்தது போலவும் ஒரு தவறான கருத்து பரப்பப்படுகிறது. சுங்க அனுமதி பெறப்பட்ட பின்னர்தான் இந்த அறிவித்தல் வழங்கப்படுகிறது.
ஒருவேளை நாங்கள் சுங்க அனுமதி பெறாமல் பொருட்களைக் கொண்டுவந்திருந்தால், அதிகாரிகள் அவற்றை உடனே பறிமுதல் செய்திருப்பார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.