பெரியகல்லாறு பகுதியில் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகத் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் இந்த கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
பெரியகல்லாறு அருளானந்தவர் வித்தியாலயம், பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இன்று இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சாமித்தம்பி இராஜேந்திராவின் வழிகாட்டலின் கீழ் இந்த தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் பெருமளவானோர் ஆர்வத்துடன் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றிச்சென்றதைக் காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.








