அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள பல முக்கிய வழக்குகள்
அடுத்த வாரம் தொடங்கவுள்ள புதிய கூட்டத்தொடரில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்றக் கட்டுப்பாட்டுக் கொள்கை, முன்கணிப்புச் சந்தைகள் தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை அமெரிக்க உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் கைது செய்யப்படும் நபர்களுக்கு, பிணை கோரும் வாய்ப்பை வழங்காமல் தொடர்ந்தும் காவலில் வைப்பதற்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டினருக்கும் பிணை வழங்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது.
கூட்டாட்சி நிதி
அதேவேளை, 'கல்ஷி' மற்றும் 'பாலிமார்க்கெட்' போன்ற முன்கணிப்புச் சந்தை தளங்களின் செயல்பாடுகளை சூதாட்டமாக கருதி மாநில அளவிலான கட்டுப்பாடுகளுக்குள் கொண்டுவருவதா அல்லது கூட்டாட்சி நிதி முகமையின் கீழ் முறைப்படுத்துவதா என்பது தொடர்பாகவும் நீதிமன்றம் ஆராயவுள்ளது.

மேலும், டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள அரசுப் பாடசாலை வகுப்பறைகளில் விவிலியத்தின் 'பத்துக்கட்டளைகளை' கட்டாயமாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற அம்மாநிலச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவையும் உயர் நீதிமன்றம் பரிசீலிக்கவுள்ளது.
அரசும் மதமும் தனித்தனியாகச் செயல்பட வேண்டும் என்ற அரசியலமைப்பு உரிமையை இது மீறுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.