நுவரெலியாவில் சிறுத்தைகளின் நடமாட்டத்தினை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து
நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் புஸ்ப விஸ்வநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொட்டகலை பகுதியில் இன்று(16.9.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்கனவே குளவிக் கொட்டுக்கு இலக்காகி பலர் உயிரிழந்துள்ள நிலையில், அதனை தடுப்பதற்கு வனஜீவராசி அதிகாரிகளோ அரசாங்கமோ, தோட்ட நிர்வாகமோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோரிக்கை
இந்தநிலையில் தற்போது சிறுத்தைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளமை தொழிலாளர்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
சிறுத்தைகள் தற்போது தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை கவ்விச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

எனவே, சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தோட்ட நிர்வாகங்கள் இணைந்து உடனடி மற்றும் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என புஸ்ப விஸ்வநாதன் வலியுறுத்தினார்.
தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீண்டகாலத் தீர்வொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை இதன் போது விடுத்துள்ளார்.