வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு: இன்னும் 14 நாட்கள் மட்டுமே..
025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதித் தொகையைச் செலுத்துவதற்கான இறுதித் திகதியை உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.
இதன்படி, நிலுவையில் உள்ள வரித்தொகையை எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தி முடிக்குமாறு வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, வருமான வரி செலுத்த வேண்டிய தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உரிய காலக்கெடுவுக்கு முன்னர் நிலுவைக் கட்டணங்களைச் செலுத்தி முடிக்குமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
வரிச் செலுத்துவோருக்கு..
இந்த அறிவிப்பு பெருநிறுவன வருமான வரி (CIT), தனிநபர் வருமான வரி (IIT) மற்றும் கூட்டாண்மை வருமான வரி (PIT) ஆகியவற்றுக்குப் பொருந்தும். இணையவழி மற்றும் வங்கி ஊடாக வரி செலுத்தும் வசதி வரி செலுத்துவோர் தங்களது வரிகளை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் இணையவழி வரி செலுத்தும் தளத்தின் ஊடாகச் செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், CIT, IIT மற்றும் PIT ஆகிய வரிக் கட்டணங்களை இலங்கை வங்கியின் (BOC) எந்தவொரு கிளையிலும் செலுத்த முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்கூட்டியே அச்சிடப்பட்ட பணம் செலுத்தும் சீட்டைப் பயன்படுத்தாமல் வங்கியில் பணம் செலுத்தும் வரி செலுத்துவோர், தங்களது ஆவண அடையாள எண்ணை (DIN) பணம் செலுத்தும் சீட்டில் குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம், செலுத்தப்படும் பணம் சரியான முறையில் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதமாகச் செலுத்தினால் வட்டி மற்றும் அபராதம்
வரிகளைச் செலுத்தத் தவறினாலோ அல்லது தாமதமாகச் செலுத்தினாலோ வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்துடன், தாமதமாகச் செலுத்துவதற்காக விதிக்கப்படும் வட்டியைத் தள்ளுபடி செய்யவோ அல்லது குறைக்கவோ முடியாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வங்கி வரைவோலை அல்லது பண ஆணை உரிய திகதிக்குப் பின்னர் பெறப்பட்டால், அந்தக் கட்டணம் தாமதமாகச் செலுத்தப்பட்டதாகக் கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துதல் தொடர்பில் உதவி தேவைப்படும் வரி செலுத்துவோர் 1944 என்ற உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
தேர்தல்கள் ஆணைக்குழுவால் மட்டும் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது- ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வலியுறுத்தல்