கிளிநொச்சியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள் - பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு
கிளிநொச்சி - கரைச்சி பகுதியில் அரச காணியில் உள்ள பெறுமதியான தேக்கு மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்ட சம்பவத்தை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருடப்பட்ட தேக்கு மரங்கள்
நீண்டகாலமாக தென்னிந்திய திருச்சபையின் பயன்பாட்டில் இருந்து வந்ததாக கூறப்படும் அந்தக் காணியில் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய மூன்று தேக்கு மரங்கள் அடியோடு வெட்டப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் தடயங்களை அழிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார், கரைச்சி பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தென்னிந்திய திருச்சபையின் பேராயரின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த மரங்கள் வெட்டப்பட்டு, அவற்றை விற்பனை செய்வதற்காக தரகர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டிய மரங்கள், விற்பனை செய்யவதற்கு முயற்சிக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.
விசாரணை முன்னெடுப்பு
இந்தச் சம்பவம் தொடர்பில் திருச்சபையுடன் தொடர்புடைய ஒருவரிடம் வினவியபோது, மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்திய அவர், இது தொடர்பில் திருச்சபையின் செயற்குழு உறுப்பினர் ஒருவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குறித்த திருச்சபையின் நிர்வாகம் மற்றும் நிதிப் பயன்பாடு தொடர்பிலும் உறுப்பினர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் நிலவி வருகின்றன. அண்மையில், திருச்சபை மக்களின் காணிக்கை நிதியில் சொகுசு வாகனம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டதாகவும், அதற்கான நிதி உரிய நிதிக்குழுவின் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பில் தென்னிந்திய திருச்சபையின் பேராயரின் பதிலைப் பெற முயற்சிக்கப்பட்ட போதிலும், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதேவேளை, இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் கைவிடுமாறு சில தரப்பினரால் பொலிஸாருக்கு அழுத்தம் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான, சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும், சட்டவிரோதம் இடம்பெற்றிருந்தால் அதில் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.