பளைப் பகுதியில் புலிகளின் முகாமா! பொலிஸ் மா அதிபர் விளக்கம்
கிளிநொச்சி - பளைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் பற்றி வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குறிப்பிட்ட வனப்பகுதியில் பயங்கரவாத முகாமோ அல்லது வெடிபொருள் உற்பத்தி நிலையமோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
பளைப் பகுதியில் உள்ள காணி ஒன்றில் விவசாயப் பண்ணை மற்றும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றே அமைக்கப்பட்டுள்ளது என்பது கிளிநொச்சிக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளில் தெரியவந்துள்ளது.

இதில் கற்றாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மூன்று மாடிகளைக் கொண்ட இந்த ஆடைத் தொழிற்சாலையில் தையல் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர் ஒருவரால் நடத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த விவசாயப் பண்ணை மற்றும் தொழிற்சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் பணியாற்றுகின்றனர்.
காணியை முறையற்ற வகையில் பயன்படுத்தி அனுமதி பெறாமல் கட்டடங்களை நிர்மானம் செய்தமை தொடர்பில், அதன் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
போலித் தகவல்களைப் பரப்பி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயல்வோர் மீது கடுமையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அனைத்து கண்டங்களுக்கான மனித உரிமை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீத் ஜயசேகரவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ஓர் இடத்தை பயங்கரவாத முகாம் என சர்ச்சையை கிளப்பும் தரப்புகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.