முதுகெலும்பிருந்தால் அரசிலிருந்து உடன் வெளியேறுங்கள்! : பங்காளிகளின் தலைவர்களுக்கு எதிரணி சவால்
"அமைச்சர்களான விமல் வீரவன்ச (Wimal Weerawansa ), வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara ) மற்றும் உதய கம்மன்பில (Udaya Gammanpila ) ஆகியோருக்கு முதுகெலும்பிருக்கும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக அரசிலிருந்து வெளியேற வேண்டும் ” என சவால் விடுத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன (Kavinda Jayawardena) தெரிவித்ததாவது,
"அரசுக்குள் இருந்துகொண்டு, அரசைப் பாதுகாக்கும் விதத்திலான அரசியலையே மேற்படி தரப்புகள் முன்னெடுத்து வருகின்றன.
ஆனால், தாங்கள் எதிர்ப்பாளர்கள் என்ற விம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு அந்தத் தரப்புகள் முற்படுகின்றன.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்கமாட்டோம் என்று விமல், வாசு, கம்மன்பில உள்ளிட்டவர்கள் சூளுரைத்தனர்.
ஆனால், மேற்கு முனையம் வழங்கப்படும்போது மௌனம் காத்தனர். ஆரம்பத்தில் போர்ட் சிற்றி சட்டமூலத்துக்குப் போர்க்கொடி தூக்கினர். இறுதியில் இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு நல்கினர்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் முன்வைக்கப்படும்போது, அமெரிக்கப் பிரஜை நாடாளுமன்றம் வர இடமளியோம் என்று மார்தட்டினர். எதிர்ப்பை வெளியிட்டனர். ஆனால், பஸில் நாடாளுமன்றம் வந்தார். நிதி அமைச்சரானார். 20 இற்கு எதிர்ப்பை வெளியிட்டவர்களே அதனை ஆதரித்தனர்.
யுகதனவி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு, ஆனால், அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்கு பாதீட்டை ஆதரித்து வாக்களிக்கின்றனர்.
இவர்கள் அரசியல் நாடகம் செய்வது தெளிவு. எனவே, முதுகெலும்பிருந்தால்
அரசியிலிருந்து வெளியேறுமாறு சவால் விடுக்கின்றோம்" என காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri