2 நாட்களாகியும் இலங்கை திரும்பாத ஷிரந்தி ராஜபக்ச..! சிங்கப்பூர் சென்ற பெண் நாடு திரும்பியதால் பரபரப்பு
சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷிரந்தி ராஜபக்ச செப்டம்பர் 19 ஆம் திகதி இலங்கை திரும்புவார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் இதுவரை நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே உறுதிப்படுத்தியுள்ளார்.
தலைமறைவான ஷிரந்தி
செப்டம்பர் 16 ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்சவுடன் சிங்கப்பூருக்குச் சென்றிருந்த பெண் உறவினர் ஒருவர் நேற்று இரவு இலங்கை திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ச ஏன் திரும்பவில்லை என்பது குறித்தோ அல்லது அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்தோ எந்தவொரு தகவலையும் வெளியிட அவரது குடும்பத்தினர் தயாராக இல்லை என்று மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ஷிரந்தி ராஜபக்ச, மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக செப்டம்பர் 16 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றதாக கமகே முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
தனது தலைமையின் கீழ் இயங்கிய “சிரிலிய சவிய” (Siriliya Saviya) அமைப்பின் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 24 ஆம் திகதி நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் (FCID) முன்னிலையில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.