இலஞ்சம் பெற்றமைக்காகவே நாமல் ராஜபக்ச கைது..! அரசு மீதான விமர்சனங்களுக்கு சுசில் ரணசிங்க பதிலடி
இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதை எவ்வாறு அரசியல் பழிவாங்கலாக குறிப்பிட முடியும் என வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று(20.09.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எயார்பஸ் கொள்வனவு விவகாரம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எயார்பஸ் கொள்வனவு விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனத்திடம் நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றார் என்று நல்லாட்சி அரசின் காலத்தில்தான் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், அன்றைய ஆட்சியாளர்கள் அது குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

தற்போது அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இதனை ரணில் தரப்பினரும் சஜித் தரப்பினரும் அரசியல் பழிவாங்கல் எனக் கூறுவதில் எந்த நியாயமும் இல்லை.
அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான தனது வியாக்கியானத் தீர்வை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்தத் திருத்தம் மீதான இரு நாள் விவாதமும் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைவாகவே 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவோம் என்றார்.