ஜெனிவா ஐ.நா தீர்மானம் தோல்வியில் முடிந்தால், எவை காரணியாகலாம்?
- ஒன்று - வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் கட்சிகளும் தலைவர்களும்
- இரண்டு - புலம்பெயர் வாழ் செயற்பாட்டாளரும் அமைப்புகளும்
- மூன்று - தீர்மானத்தை முன்னெடுத்த நாடுகள்
- நான்கு - தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் விடயங்கள்
ஐ.நா. மனித உரிமை சபையின் 46ஆவது கூட்டத்தொடர் இலங்கை தீவைப் பொறுத்தவரையில் பலவழிகளில் முக்கியம் பெற்றுள்ளது.
நாற்பத்து ஆறாவது கூட்டத் தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஜெனீவாவில், பீஜி நாட்டின் ஐ.நா. பிரதிநிதி திருமதி கான் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இக் கூட்டத் தொடர் வழமைக்கு மாறாக யாவும் இணையதளம், கணனி மூலமாகவே நடைபெறுகிறது.
சுவிட்ஸர்லாந்தின் சுகாதார அமைச்சு கொரோனா (கோவிட்) வின் கடுமையான தாக்கம் காரணமாக, இக் கூட்டத்தொடரில் நேரில் பங்கு பற்றுவதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை.
யாவரும் அறிந்த விடயம் என்னவெனில், ஐ.நா மனித உரிமை சபை மூலமாகச் சிறீலங்கா மீது பல தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பதுடன், சிறீலங்காவிற்கு அவற்றை நிறைவேற்றுவதற்கான போதிய கால அவகாசத்தையும் வழங்கியிருந்தனர்.
வழமைபோல் சிறீலங்காவோ பல சாட்டுப் போக்குகளைக் கூறித் தீர்மானத்திலிருந்தவற்றை செய்யாது காலம் கடத்தி வந்துள்ளனர்.
இவ்வேளையில் இவ் மாதத்துடன் அவர்களிற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்ததுடன், ஐ,நா மனித உரிமை ஆணையாளர், முன்னைய தீர்மானத்தில் கூறப்பட்டதற்கு இணங்க, சிறீலங்காவின் தீர்மானம் பற்றிய நடைமுறை, அணுகுமுறை, தொடர்ச்சிபற்றிய அறிக்கையை,கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்தார்.
ஐ.நா. மனிதர் உரிமை ஆணையாளர் அறிக்கை - சிறீலங்கா அரசு முன்னைய தீர்மானங்களை எவ்வளவு தூரம் அலட்சியம் பண்ணியுள்ளது என்பதுடன், இலங்கைத்தீவில் மனித உரிமை மீறல்கள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை சிறீலங்கா உள்நாட்டில் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கத் தவறியுள்ள காரணத்தினால், ஐ.நா மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகள் சிறீலங்காவை நிச்சயம் (International Court of Justice - ICC) ஐ.சி.சி எனப்படும் சர்வதேச கிறிமினல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் முயற்சிகளை ஆரம்பிக்குமாறு வேண்டியிருந்தார்.
அதாவது, ஐ.நா பாதுகாப்புச் சபை மூலம் சிறீலங்காவை ஐ.சி.சிக்கு அனுப்ப வேண்டுமென்பதையே ஐ.நா மனித உரிமையாளர் வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை ஐ.நா அங்கத்துவநாடுகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைய, சர்வதேச அல்லது உலகளாவிய அதிகார வரம்பின் (Universal Jurisdiction) அடிப்படையில் சிறீலங்காவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குகளை தொடரவேண்டும் என்பதுடன், அவர்கள் மீது பிரயாண தடைகள் போன்று பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.
ஆணையாளரது அறிக்கை ஜனவரி மாதம் வெளிவந்துள்ள காரணத்தினால், இவ் அறிக்கையில் கூறப்பட்ட முக்கிய விடயங்களை, மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகள் தமது கவனத்தில் கொள்வார்கள் என்பதை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மட்டுமல்லாது, உலகளாவிய ரீதியில் யாவருடைய எதிர்பார்ப்பாகக் காணப்பட்டது.
ஆனால் சிறீலங்கா மீதான தீர்மானத்தை முன்மொழியும் பிரதான நாடான பிரித்தானியாவும் மற்றைய இணைத்தலைமை நாடுகளான கனடா, ஜேர்மனி, வட - மசிடோனியா, மொன்ரநீகிரோ, மலாவி ஆகிய நாடுகளினால் கடந்த மாதம் 24 ஆம் திகதி மனித உரிமை சபையின் செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட தீர்மானம் பாரிய ஏமாற்றத்தை யாவருக்கும் கொடுத்துள்ளது.
பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பிற்கு மேலாக ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இவ் தீர்மான வரைவில் முக்கியம் பெற்றிருக்கவில்லை என்பது மிகக்கவலைக்குரிய விடயம்.
எதிர்வரும் 18ஆம் திகதிவரை மற்றைய நாடுகளுடன் உரையாடிப் பல திருத்தங்களை இத்தீர்மான வரைவில் மாற்றங்கள் செய்யப்படலாமென எதிர்பார்க்கப்பட்ட பொழுதிலும், சிறிலங்காவை ஐ.சி.சி க்கு அனுப்புவதற்கான பாரிய முன்னெடுப்பு இவ் தீர்மான வரைவில் ஏற்படும் என்பது தொடர்ந்து கேள்விக்குரியதாகவே காணப்படுகிறது.
அது என்னவானாலும், பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து இவ் தீர்மானத்தில் இணைக்குமாறு வேண்டுகோள் வைப்பதனால் எந்தவித பிரயோசனமும் கிடைக்கும் அறிகுறிகள் அறவே கிடையாது என்பதே உண்மை.
காரணம், பிரித்தானியாவும், இணைத்தலைமை நாடுகளும், தாம் ஏற்கனவே கொண்டுவந்துள்ள தீர்மான வரைவிற்கு மனித உரிமை சபையின் நாற்பத்து ஏழு அங்கத்துவ நாடுகளிடையே, ஆதரவு திரட்டும் இவ்வேளையிலே, இவ் தீர்மானத்திற்கு மற்றைய நாடுகள் ஆதரவு அளிப்பதற்கு முன், அவர்கள் அது, இது தீர்மானத்தில் இருக்கக் கூடாது என பேரம் பேசுவது நடைபெறுகிறது என்பது தெளிவான விடயம்.
அப்படியானால் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டது போலவோ, அல்லது பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது போலவோ, தீர்மானம் மிகவும் கடுமையாகக் காணப்படுமானால், அவ்வரைவிற்கு மற்றைய அங்கத்துவ நாடுகளின் ஆதரவு கிடைக்காவிடில், பிரித்தானியாவும் மற்றைய இணைத்தலைமை நாடுகள் முன்வைக்கும் சிறீலங்கா மீதான தீர்மானம் நிச்சயம் தோல்வி அடையும் என்பது அவர்களது பார்வை.
இதேவேளை நரிபோல் உன்னிப்பாக இவ் தீர்மானத்தை அவதானிக்கும் சிறீலங்காவும் அவர்களது நட்பு நாடுகளான சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள், சிறீலங்கா மீது முன்வைக்கும் தீர்மானம் எப்பொழுது மனித உரிமை சபையில் தோல்வியைச் சந்திக்கும் என மிக அவலுடன் எதிர்பார்த்த வண்ணமுள்ளனர்.
அப்படியாக தீர்மானம் தோல்வி அடையுமானால், அன்றிலிருந்து சிறீலங்கா தாம் இழைத்த போர்க்குற்றம். சர்வதேச குற்றம், இன அழிப்பு, மனித உரிமை மீறல்கள் போன்றவற்றிலிருந்து,
சர்வதேச சமுதாயத்தின் பிடியிலிருந்தும் விடுபடலாமென துடித்துக் கொண்டிருப்பதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.
இவ் தீர்மானம் தற்போதைய நிலையில், பாதிக்கப்பட்டவர்களை திருப்திபடுத்தாவிடிலும், முன்னைய தீர்மானங்களிலிருந்து வேறுபட்டுள்ளதுடன் தற்போதைய விரைவு பெரும் வெற்றியுடன் நிறைவேற்றப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஆனால், மிக நீண்டகாலமாக நீதியைச் சர்வதேச சமுதாயத்திடம், ஐ.நா விடமிருந்து எதிர்பார்த்த மக்களிற்கு, இது பெரும் ஏமாற்றம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் சர்வதேச ரீதியாக பாரிய அனுதாபம், ஆதரவு தமிழ் மக்களிற்குக் காணப்படும் இந்நிலையில், கனடா, அமெரிக்கா வாழ் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களும் சங்கங்களும், உலகளாவிய இவ் சாதகமான நிலையைப் பாவித்து, எதற்காக நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச்சபையில் சிறீலங்கா மீது ஒர் பாரிய கண்டன அறிக்கையைக் கொண்டுவர எண்ணவில்லை?
இவ் கட்டுரை மூலம் - ஐ.நா பொதுச்சபையின் முன்னைய செயற்பாடுகளையும், மற்றைய இனவிடுதலைப் போராட்டங்களிற்கு ஐ.நா பொதுச்சபையின் அணுகுமுறையும் கனடா,அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களும் செயற்பாட்டாளர்களும் அறிந்து தெரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.