பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி மீதான விசாரணை திகதியை அறிவித்தது ICC!
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ துதெர்த்தே மீதான மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த நீதிமன்ற விசாரணை, வரும் நவம்பர் 30ஆம் திகதி தொடங்கும் என நெதர்லாந்தின் த ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது நேற்று(27.05.2026) வெளியாகியுள்ளது.
மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பின்னர் கொலை அச்சுறுத்தல்கள்..! சமூக செயற்பாட்டாளர் வெளிப்படுத்திய உண்மைகள்
போதைப்பொருள் ஒழிப்பு
அவர் ஜனாதிபதியாக இருந்தபோது நாட்டில் மேற்கொண்ட கொடூரமான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது இந்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது 81 வயதாகும் துதெர்த்தே மீது, குறைந்தது 76 பேரைக் கொலை செய்தது மற்றும் இருவரைக் கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட மூன்று முக்கிய மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

கடந்த 2016 முதல் 2022 வரையிலான அவரது ஆட்சிக்காலத்தில், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடி ஒழிப்பு நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனினும், தான் காவல்துறையினரைத் தற்காப்புக்காக மட்டுமே சுட உத்தரவிட்டதாகக் கூறி, இந்த ஒழிப்பு நடவடிக்கையை துதெர்த்தே தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறார்.
நீதிமன்ற தீர்ப்பு
முன்னதாக, கடந்த 2025 மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட தெர்த்தே, த ஹேக் நகருக்குக் கொண்டு வரப்பட்டு தற்போது சர்வதேச நீதிமன்றத்தின் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று(27) நடைபெற்ற நீதிமன்றக் கூட்டத்தில் நேரில் முன்னிலையாவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
வயது முதிர்வு மற்றும் அறிவாற்றல் குறைபாடு காரணமாக அவர் விசாரணைக்கு தகுதியற்றவர் என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டபோதிலும், அமர்வு நேரங்களில் சில மாற்றங்களுடன் அவர் விசாரணையை எதிர்கொள்ள முடியும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உலகின் ஒரே நிரந்தர போர்க்குற்ற நீதிமன்றமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நடைபெறும் வழக்குகள், இறுதித் தீர்ப்பை எட்டுவதற்குப் பொதுவாகப் பல ஆண்டுகள் ஆகும்.
ஒருவேளை இந்த வழக்கில் துதெர்த்தே மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.