புத்த சாசனத்தைப் பாதுகாக்க அவசர சீர்திருத்தங்கள் தேவை
புத்த சாசனம் தற்போது முன்னெப்போதையும் விட மிகவும் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, எச்சரித்துள்ளார்.
இதனை எதிர்கொள்ள பௌத்த துறவிகள் அமைப்பிற்குள் அவசர சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள விரிவான அறிக்கை ஒன்றில், புத்த சாசனத்தின் தற்போதைய நிலை குறித்தும், அது எதிர்கொள்ளும் நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்கள் குறித்தும் ஒரு பரந்த உள்நாட்டு விவாதத்தை நடத்த வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதற்கொண்டே, புத்த சாசனத்திற்குள் ஏற்படும் உள்நாட்டு நெருக்கடிகள் மூலம் பயனடையும் சில குழுக்கள், அங்கு அர்த்தமுள்ள சீர்திருத்தங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகச் செயல்பட்டு வந்துள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களை விட தற்போது பௌத்த சாசனம் கடுமையான சவால்களைச் சந்தித்து வருவதால், சீர்திருத்த முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசரமான ஒன்றாக மாறியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எச்சரித்துள்ளார்.
அவ்வப்போது எழும் தனிப்பட்ட சம்பவங்களை மட்டும் கையாள்வதோ அல்லது அவை பொதுமக்களுக்குத் தெரியாமல் மூடிமறைக்க முயல்வதோ, ஆழமான கட்டமைப்புச் சிக்கல்களுக்குத் தீர்வாகாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மாறாக, இத்தகைய அணுகுமுறைகள் உண்மையான நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதை மறைத்து வைக்கும் அபாயத்தையே ஏற்படுத்தும்" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சினைகளின் மூலக் காரணங்களைக் கண்டறிந்து, அதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, ஒரு பரந்த உள்நாட்டு விவாதத்தைத் தொடங்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
புத்த சாசனத்தின் நீண்டகாலத் தொடர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக, ஒரு 'தம்ம சங்காயன' (பௌத்த மாநாடு) கூட்டுவதைக் குறித்து பௌத்த தலைமைத்துவம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
1956ம் ஆண்டில் தனது தந்தையான எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் ஆட்சியில் பௌத்த சாசனத்தின் நன்மைக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவரது படுகொலையின் பின்னர் அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்மொழியப்பட்டுள்ள இந்த முயற்சியை ஒழுங்கமைக்கவும், அதனை எளிதாக்கவும் மூத்த பௌத்த பொதுநிலைப் தலைவர்கள் குழுவோடு இணைந்து பணியாற்றத் தான் தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.