தன்னுடைய சொத்துக்கள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்கள்
தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட சொத்து விபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் அனைத்துமே சட்ட ரீதியான முறையில் உழைத்து பெற்றுக் கொள்ளப்பட்டவை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தாமும் தமது குடும்ப உறுப்பினர்களும் உரிய முறையில் வரிகளை செலுத்தி பெற்றுக் கொள்ளப்பட்ட வருமானத்தின் ஊடாக சொத்துக்கள் கொள்வனவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வித பிரச்சினையும் கிடையாது
தமது சொத்து விபரங்கள் உரிய முறையில் சட்டரீதியான அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தான் கடந்த 40 ஆண்டுகளாக வரி ஆவணங்களை பேணி வருவதாகவும் உரிய முறையில் வருமான வரிகள் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் சேவையில் இணைந்து கொள்ள முன்னரே வரி ஆவணங்களுக்கு ஏற்ற வகையில் உரிய முறையில் எந்தவிதமான நிலுவையும் இன்றி வரி செலுத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
தமது சொத்து விபரங்கள் தொடர்பில் எவருக்கேனும் பிரச்சினை இருந்தால் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.



