ஹிலாரி கிளிண்டனை சிறப்புத் தூதுவராக நியமியுங்கள்: வவுனியாவில் போராட்டம்
இலங்கையில் தமிழர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில் ஹிலாரி கிளிண்டனை சிறப்புத்தூதராக நியமிக்க வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் அமெரிக்க ஜனாதிபதி பைடனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமைகள் தினமான இன்று வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக குறித்த சங்கத்தால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
உரிமை மற்றும் கருத்துசுதந்திரம்
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்ககையில்,
மனித உரிமைகள் என்பது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உள்ளடக்கியது.
வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் கருத்துசுதந்திரம் கலாச்சாரத்தில் பங்கேற்கும் உரிமை, உணவுக்கான உரிமை, வேலை மற்றும் கல்வி பெறும் உரிமை உள்ளிட்ட சமூக, கலாச்சார பொருளாதார உரிமைகளை உள்ளடக்கியது.
இலங்கையில் உள்ள தமிழர்களின் வரலாறு 5000 ஆண்டுகளுக்கும் மேலானது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, போர்த்துகீசிய ஆக்கிரமிப்பாளர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் இப்போது சிங்களர்களின் ஆட்சிக்காலம் முழுவதிலும் இந்த நிலமை நீடித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சுயநிர்ணய உரிமை
நீதி மற்றும் சமத்துவத்துக்கான தமிழர்களின் போராட்டம், அநீதிகள் மற்றும் மீறல்களை வரிசையாக எதிர்கொண்டது, அது அவர்களின் ஒட்டுமொத்த நலன்களை வெகுவாகக் குறைத்துள்ளது.
தமிழர் அல்லாத ஆட்சியாளர்களிடம் இருந்து விடுபட்டு மனித உரிமைகளை மீட்டெடுக்க நாம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொசோவா, போஸ்னியா, கிழக்கு திமோர் மற்றும் தெற்கு சூடான் போன்ற கடந்த கால நிகழ்வுகளில் பார்த்தது போல், சர்வதேச ஆதரவு எமக்கு முக்கியமானது.
சுயநிர்ணய உரிமையை அடைவதற்கும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தமிழர்களான நாம் அவசரமாக உதவிகளை நாடி நிற்கின்றோம்.
எனவே அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் ஒரு நிலைப்பாட்டை எடுத்துஎமது உரிமைகளை ஆதரிப்பது மிகவும் முக்கியமானது.
கொசோவா, பொஸ்னியா, கிழக்கு திமோர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளைப் போன்று, வெற்றிகரமான வாக்கெடுப்புக்கள் மூலம், தமிழர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களுக்கு தீர்வு காண்பதில் சர்வதேச ஆதரவு எமக்கு வேண்டும்.
எமக்கான பாதுகாப்பு, கண்ணியம், சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தவகையில் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இலங்கையைப் பற்றி மிகவும் அறிந்தவர் என்றும், இந்த பணியை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவில் மிகவும் பொருத்தமானவர் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |