இரண்டு வருடங்களாக இடைநிறுத்தப்பட்ட தனி வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தனி வீட்டுத்திட்டங்கள், சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த இந்த வீட்டுத்திட்டங்கள், ஒப்பந்தக்காரர்களின் முறையான முகாமைத்துவமின்மை, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி ஒதுக்கீடு

இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் மீண்டும் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு, நிர்மாணப் பணிகளில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து, வீட்டுத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகத் தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கமைய, அக்கரப்பத்தனை எல்பியன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த 25 தனி வீடுகளின் பணிகளும் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. புதிய ஒப்பந்தக்காரர்களிடம் நிர்மாணப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீட்டுத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்து, மண்சரிவு மற்றும் தீ விபத்துக்களால் பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடுகளைக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிர்மாணப் பணி

நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வீட்டுத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவிக்கும் தொழிலாளர்கள், நிர்மாணப் பணிகளை விரைவாக நிறைவு செய்வதற்கு தமது பூரண ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர்.
அத்துடன், மலையக மக்களின் வீடமைப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நடவடிக்கை எடுத்து வரும் இலங்கை அரசாங்கத்திற்கும், நிதியுதவி வழங்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தமது நன்றிகளையும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பாகும் சவூதி விமான நிலைய தாக்குதல்! 12 பேர் பலி - பலரின் நிலைமை கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள்