அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த எல்ல விடுதி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கட்டுப்படுத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தமைக்காக எல்ல பகுதியிலுள்ள விடுதி மற்றும் உணவகம் ஒன்றுக்கு 260,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை புலனாய்வு அதிகாரிகளால் கடந்த ஒக்டோபர் 02ஆம் திகதி, எல்ல தொடருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 'எல்ல ஹோஸ்டல் அண்ட் ரெஸ்டாரன்ட்' எனும் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, அதிகபட்ச சில்லறை விலை 120 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு லீட்டர் குடிநீர் போத்தல் ஒன்றை, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 80 ரூபா அதிகமாக, அதாவது 200 ரூபாவிற்கு விற்பனை செய்தமை கடந்த செப்டம்பர் 29ஆம் திகதியுடன் காலாவதியான 400 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 6 சோடா போத்தல்கள், ஏனைய பொருட்களுடன் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை என்பன கண்டறியப்பட்டது.
கோரிக்கை
இந்த சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் தொடர்ந்தது.
இந்த வழக்கு நேற்று(14.10.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.இதையடுத்தே நீதிமன்றம் அவருக்கு 260,000 ரூபா அபராதத்தை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைகளுக்கு அமைவாகவே வியாபார உரிமையாளர்கள் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், பொருட்களின் காலாவதி திகதிகளை தொடர்ச்சியாக பரிசீலித்து, காலாவதியான பொருட்களை உடனடியாக அகற்றுமாறும் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், பொதி செய்யப்பட்ட உணவு மற்றும் பானங்களை கொள்முதல் செய்யும்போது அதன் காலாவதி திகதிகளை கட்டாயம் பரிசீலிக்குமாறு நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ள அதிகாரசபை, அதிக விலை ஈட்டல் மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கோரியுள்ளது.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam