முல்லைத்தீவு - நட்டாங்கண்டல் வைத்தியசாலை நோயாளர் காவுவண்டி சேவை சீரமைப்பு
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பிரதேச வைத்தியசாலைக்குரிய நோயாளர் காவு வண்டியின் சேவைகள் ஓரிரு நாட்களுக்குள் சீர் செய்யப்படும் என முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பிரதேச வைத்தியசாலைக்குரிய நோயாளர் காவு வண்டி கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக சேவையில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய இந்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்பு கொண்டு வினவியபோது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நட்டாங்கண்டல் பிரதேசம்
குறிப்பாக நட்டாங்கண்டல் பிரதேசத்தை அண்டிய பாண்டிய குளம், மூன்று முறிப்பு, பனங்காமம், கரும்புள்ளியான் செல்வபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குறித்த வைத்தியசாலையின் சேவையை நம்பியே இருப்பதாகவும் கடந்த 15 நாட்களாக நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தினால் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் சாரதி இடமாற்றம் காரணமாக இடையூறுறாக கானப்பட்ட முல்லைத்தீவு மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பிரதேச வைத்தியசாலைக்குரிய நோயாளர் காவு வண்டியின் சேவைகள் ஓரிரு நாட்களுக்குள் சீர் செய்யப்படும் என முல்லைத்தீவு பிராந்திய சுகாதபர சேவைகள் பணிமனையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.