தூசு தட்டப்படும் டக்ளஸின் வழக்குகள்.. அம்பலமாகுமா EPDPயின் உண்மை முகம்!
முன்னாள் அமைச்சர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தலைவரான டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கியை மதுஷ் என்ற ஒருங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்தவருக்கு கொடுத்ததாக கூறப்படும் விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்டு, பின்னர் கம்பஹா நீதிமன்றத்தால் நேற்று பிணையில் அனுப்பப்பட்டார்.
இதற்கிடையில், டக்ளஸ் தேவானந்தா மீது முன்பிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
ராஜபக்சக்களுடனான நெருக்கம்..
அவர் கைது செய்யப்பட்டமையானது, டக்ளஸ் தேவானந்தாவைச் சுற்றியுள்ள நீண்டகால மனித உரிமை குற்றச்சாட்டுகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என தெரிவித்து சர்வதேச ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் உள்நாட்டுப் போர் காலத்தில், டக்ளஸ் தேவானந்தா, ராஜபக்ச ஆட்சிக்கு மிகவும் நெருக்கமான ஒரு துணை இராணுவ அமைப்பான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு (EPDP) தலைமை வகித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த செய்தியின் படி, 1994ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், வடக்கு - கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்த காலகட்டங்களில் அரசுக்கு முழுமையான ஆதரவு வழங்கினார்.
2012ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ குழுவில் அவர் இடம்பெற்றிருந்தார்.
பெராமிலிட்டரி அமைப்பு
இத்தகைய அரசியல் பதவிகளுக்கிடையிலும், தமிழ் சமூகத்தில் டக்ளஸ் தேவானந்தா அரசியல் பிரதிநிதியாக அல்ல, அரசின் ஒடுக்குமுறையின் ஒரு முகமாகவே பார்க்கப்படுவதாக அச்செய்திக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.

EPDP எனும் பெராமிலிட்டரி (Paramilitary - அரசியலோ அல்லது அரசுப் படையோ சார்ந்ததாக செயல்படும், ஆயுதம் பெற்ற அமைப்பு) அமைப்பின் தலைவராக, அவர் இலங்கை அரசின் பாதுகாப்புடன் செயல்பட்டதாக பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.
உள்நாட்டுப் போரின் போது, EPDP இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு, கடத்தல், மிரட்டல், நீதிமன்றத் தீர்ப்பில்லா கொலைகள் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
2007ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க தூதரகத்தின் இரகசிய ஆவணங்களில், EPDP யாழ்ப்பாணம் மற்றும் தீவுப் பகுதிகளில் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசமான குற்றச்சாட்டுக்கள்
இராணுவத்தின் மறைமுக ஒத்துழைப்புடன், EPDP தண்டனை அச்சமின்றி செயல்பட்டதாகவும், அதன் உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டதாகவும் அந்த ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

EPDP மீது சுமத்தப்பட்டுள்ள மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளில் ஒன்று, குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் தொந்தரவு தொடர்பானது.
விதவைகள் அதிகமாக இருந்த யாழ்ப்பாணப் பகுதிகளில், பொருளாதார பாதுகாப்பு என்ற பெயரில் பெண்களை வஞ்சித்து, பின்னர் அவர்களின் குழந்தைகளை கடத்தி, இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் வேலை முகாம்கள் மற்றும் வணிகவிழிப்பு வளையங்களுக்கு விற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
சில சிறுமிகள் இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், ஒரே இரவில் பல படைவீரர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.
மனித உரிமை மீறல்கள்
இது தொடர்பில் வெளியில் தெரிவித்தால் தாங்கள் பழிவாங்கப்படும் அச்சம் இருந்ததால் பெற்றோர்கள் முறைப்பாடு அளிக்க முடியாத சூழல் நிலவியதாகவும் கூறப்படுகிறது.

அது மாத்திரமன்றி, கடத்தல்கள் மற்றும் கட்டாய காணாமல் ஆக்கல்கள் தொடர்பிலும் EPDP மீது நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன.
மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டீபன் சுந்தரராஜ், EPDP மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்திய பின்னர், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட அதே நாளில் காணாமல் ஆக்கப்பட்டார். அவரது நிலை இன்றளவும் தெரியவில்லை எனவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
EPDP தொடர்புடைய பல கொலைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகமொன்றின் தமிழ்ச் சேவையில் பணியாற்றிய செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் 2000ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2008ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொழும்பில் கோவிலுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வாறான பல அரசியல் கொலைகளில் EPDP பெயர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களின் மனநிலை
வன்முறைக்கு அப்பால், நில ஆக்கிரமிப்பு மற்றும் பொருளாதார சுரண்டல் குறித்த குற்றச்சாட்டுகளும் EPDP மீது உள்ளன, யாழ்ப்பாண நகரில் தனியார் சொத்துக்கள் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டதாகவும், உப்பு உற்பத்தி, மணல் அகழ்வு உள்ளிட்ட வணிக நடவடிக்கைகள் EPDP கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் பார்வையில், டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் வாழ்க்கை, இலங்கையில் பெராமிலிட்டரி வன்முறைக்கு அரசு எவ்வாறு பாதுகாப்பு வழங்குகிறது என்பதை காட்டும் விதமாகவே உள்ளதாக கருதுகின்றனர்.
இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு இடையிலும் அரசாங்கம், டக்ளஸ் தேவானந்தாவிற்கு அதிகாரம் தொடர அனுமதித்தது என்பதுவும் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மையை அதிகரிக்கின்றது என குறித்த செய்தி சுட்டிக்காட்டுகின்றது.
பல தசாப்தங்களாக சுமத்தப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும், டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து அதிகாரத்தில் நீடிப்பது, இலங்கையில் தண்டனையின்மை எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதையே மீண்டும் நினைவூட்டுவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Sajithra அவரால் எழுதப்பட்டு, 10 January, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.