அமெரிக்காவில் வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் மீது துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணம், போர்ட்லேண்ட் நகரில் சோதனையின் போது அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் (CBP) மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இவர்கள் சர்வதேச அளவில் தேடப்படும் ஆபத்தான 'ட்ரென் டி அரகுவா' (Tren de Aragua) எனும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
வியாழக்கிழமை பிற்பகல், போர்ட்லேண்டில் ஒரு மருத்துவமனைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை அதிகாரிகள் மறித்தனர்.
அதன்போது காரில் இருந்த லூயிஸ் டேவிட் நிக்கோ மொன்காடா மற்றும் அவரது மனைவி ஆகியோர் காரை நிறுத்தாமல், அதிகாரிகள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் தற்காப்பிற்காக அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவரும் காயமடைந்தனர். மொன்காடா 2022-லும், அவரது மனைவி 2023-லும் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளனர்.இவர்கள் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளன.
கைதான பெண் குறித்த பகுதியில் பாலியல் தொழில் நடத்தும் கும்பலில் முக்கியப் பங்கு வகித்ததாகவும், இதற்கு முன்னரும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.
நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள்
மினியாபோலிஸ் நகரில் கடந்த புதன்கிழமை ரெனீ நிக்கோல் குட் என்ற பெண் அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அடுத்த நாளே போர்ட்லேண்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் போர்ட்லேண்ட் வீதிகளில் இறங்கி கூட்டாட்சிப் படைகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, போர்ட்லேண்ட் மேயர் கீத் வில்சன் மற்றும் ஓரிகான் ஆளுநர் ஆகியோர் கூட்டாட்சி முகமைகள் நகருக்குள் தற்காலிகமாகச் செயல்படத் தடை விதிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறுபுறம், "வாகனத்தையே ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகாரிகளைக் கொல்ல முயல்வது ஒரு உள்நாட்டுப் பயங்கரவாதம்" என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கிறிஸ்டி நோம் சாடியுள்ளார்.