முல்லைத்தீவில் அதிபர் நியமனம் கோரி மாணவர்கள் - பெற்றோர்கள் போராட்டம்
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முல்லை கல்விவலயத்தின் கீழ் உள்ள மாத்தளன் றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் கலைவன் பாடசாலைக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அதிபர் இல்லாத நிலையினால் அதிபரை உடனடியாக நியமிக்க கோரி பெற்றோர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம், நேற்று (01.07.25) காலை பாடசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, "அந்த ஆரம்ப பாடசாலைக்கு கடந்த ஆண்டு 11ஆம் மாதம் தொடக்கம் அதிபருக்கான வெற்றிடம் காணப்படுகின்றது. இது தொடர்பில் பெற்றோர்கள் வலய கல்வி அலுவலகத்திற்கு சென்று இந்த கோரிக்கையினை முன்வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் வடமாகாண ஆளுனரிடம் அதிபரை நியமிக்க கோரிக்கை முன்வைத்தபோதும் அவர் இரண்டு வாரங்களில் பாடசாலைக்கு அதிபரினை நியமிப்பதாக தெரிவித்து இன்று நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் எந்த முடிவும் இல்லாத நிலை காணப்படுகின்றது.
பலமுறை முறைப்பாடு
இந்த நிலையில் முல்லை கல்வி வலயத்திணைக்களத்திற்கும் இது தொடர்பில் முறையிட்ட போது அவர்கள் பாடசாலையில் இரண்டாம் தவணை பரீட்சைமுடிய அதிபரை நியமிப்பதாக சொன்னார்கள் பரீட்சை முடிந்த பின்னர் வலயத்தினை தொடர்பு கொண்டு கேட்டபோது இப்போது தேர்தல் நடக்கின்றது.
தேர்தல் முடிய அதிபரை நியமிப்பதாக சொன்னார்கள் தேர்தல் முடிந்து இதுவரை அதிபர் எவரும் நியமிக்கப்படவில்லை முல்லை வலயக்கல்லி திணைக்களம் ஆனந்தபுரத்தில் உள்ள அதிபர் ஒருவரை (முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் கடமையாற்றும்) மாத்தளன் பாடசாலைக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளமையினை கடந்த 19.02.2025 அன்று வலயத்தில் இருந்து மாகாணத்திற்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்ட போதும் எந்த முடிவும் மாகாணத்தில் இருந்து கிடைக்கவில்லை என வலயத்திணைக்களத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் பாடசாலைக்கு அதிபர் நியமிப்பது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம் மாணவர்களையோ,ஆசிரியர்களையோ பாடசாலை வளாகத்திற்குள் நுளைய அனுமதிக்காது தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாத்தளன் றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் தற்போது 50ற்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்று வருகின்றார்கள் இந்த நிலையில் கிராமத்தில் உள்ள ஒரோ ஒரு பழமை பொருந்திய பாடசாலையாக இந்த பாடசாலை காணப்படுகின்றது போரிற்கு முன்னர் இந்த பாடசாலையில் 150 வரையான மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் இறுதிப்போரின் போது இந்த பாடசாலை காயமடைந்த மக்கள் தஞ்சமடைந்த ஒரு மருத்துவமனையாக இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்மையில் (கடந்த ஏப்ரல் மாதமளவில்) வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த மாணவர்கள் கல்வி கற்கும் 266 பாடசாலைகள் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 37 பாடசாலைகள் இவ்வாறு காணப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு இந்த பாடசாலையினையும் மூடுவதற்கான நடவடிக்கையாகவே இதனை பார்க்கமுடிகின்றது என்றும் எண்ணத் தோன்றுவதாக பலர் தெதரிவிக்கின்றனர்.



