மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து - இளைஞர் உயிரிழப்பு
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் நேற்று(20.11.2026) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த 21 வயதுடைய மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மல்வத்தைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் உடனடியாக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த 21 வயதுடைய மற்றைய இளைஞர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களின் கவனயீனமான மற்றும் தவறான சாரத்தியத்தினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்மாந்துறை போக்குவரத்துப் பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.