அனைத்து மாணவர்களும் வீட்டுத்தோட்டம் செய்வதில் ஈடுபடுவது அவசியம்..
பாடசாலைகளில் பயிர்த் தோட்டங்கள் அமைப்பதற்குக் கல்வி அமைச்சும் அரசசார்பற்ற நிறுவனங்களும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றன. பெரும்பாலன பாடசாலைகளில் விவசாயத்தை ஒரு பாடமாகப் பயிலுகின்ற மாணவர்களே இதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
அதே போன்றே, வீட்டுத்தோட்டப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கும் விவசாயப்பாடம் கற்கின்ற மாணவர்களே அனுப்பிவைக்கப்படுகிறார்கள். பாடசாலைத் தோட்டமோ அல்லது வீட்டுத்தோட்டமோ எல்லா மாணவர்களும் பங்கேற்க வேண்டும்.
இவை விவசாயப் பாடம் கற்கின்ற மாணவர்களுக்கானது என்ற மனோநிலை மாறவேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்திக் தலைவர் பொ. ஐங்கரநேசன் இடித்துரைத்துள்ளார். மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் மாணாக்கஉழவர் என்ற வீட்டுத்தோட்டப் போட்டியை நடாத்தி வருகின்றது.
இதற்கான விதைகளையும், நாற்றுகளையும் வழங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை 24.08.2025) நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதித்துவிடும் எனக்கருதிக் கற்றலுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிப்பதில்லை. பாடப் புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்கள் வாசிப்பதற்குக்கூட விடுவதில்லை. இவற்றால் பரீட்சைப் பெறுபேறுகள் குறைந்து விடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது தவறான நம்பிக்கை.
பாடசாலைகளில் கூடுதலான புள்ளிகளைப் பெறுபவர்களும், உயர்சித்திகளைப் பெற்று முன்னணியில் நிற்பவர்களும் பாடங்களில் மாத்திரம் கவனம் செலுத்துகின்ற புத்தகப் பூச்சிகள் அல்லர்.
இவர்கள் கற்றலுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுமாகவே உள்ளார்கள். மாணவர்கள் கூடுதலான புள்ளிகளைப் பெறவேண்டும் என்பதற்காக அவர்களை எந்நேரமும் படிபடி படிபடி என்று நச்சரிப்பதும்இ கற்றலுக்குப் புறம்பான நடிவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதைத் தடுப்பதும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் உயர்வுக்குப் பதிலாகப் பாதிப்பையே ஏற்படுத்துகின்றன.
வீடுகளில் மாணவர்கள் கற்கும்போது நேரஅட்டவணை போட்டு அதன்படிதான் மாணவர்கள் படிக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் வற்புறுத்துவதுகூடப் பிழையானது என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவை ஏற்படுத்தும் மனஅழுத்தங்களில் இருந்து விடுபடும் ஒரு வழியாகவே மாணவர்கள் தவறான பாதைக்குச் செல்கிறார்கள்.
வீட்டுத்தோட்டங்கள் தேவையான மரக்கறி வகைகளைக் குறைந்த செலவில் தருவனவோ அல்லது நஞ்சற்ற உணவைத் தருவனவோ மாத்திரம் அல்ல. விதைகளில் முளை விடுவது தொடங்கி, அவை நாற்றாக நிமிர்ந்து, செடி கொடியாக உயர்ந்து பூத்துக் காய்க்கின்ற ஒவ்வொரு பருவமும் அவற்றை அவதானிக்கும் மாணவர்களின் மனோநிலையில் ஆரோக்கியமான மாற்றங்களை உண்டுபண்ணுகின்றன.
வீட்டுத் தோட்டங்கள் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஒத்தடங்களைத் தருகின்றன என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு அவர்களை வீட்டுத்தோட்டச் செய்கையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.







