நாட்டை உலுக்கிய ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து - நேரில் கண்ட தொழிலாளியொருவர் வெளியிட்ட காரணம்
ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு, மின்கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நேற்று காலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், புகையை சுவாசித்த பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெளியான காரணம்
இந்நிலையில், தீ விபத்து தொடர்பில் உயிர்பிழைத்த தொழிலாளி ஒருவர் கூறுகையில்,

உள்ளே இருக்கும் தூசியை வெளியே இழுக்கும் விசிறியில் ஏற்பட்ட திடீர் மின் கசிவே இதற்கு காரணம். நாங்கள் அதை பார்த்து தீ எச்சரிக்கை மணியை ஒலித்தோம்.” மின்சாரக் கசிவின் காரணமாக மெழுகு பூசப்பட்ட துணி ஒன்றில் தீ பற்றிக்கொண்டது. இதன் பின்னர் அது 5 லீட்டர் தகரக்கேன்களுக்கும் பரவியது.
இதன்போது உள்ளே சிக்கியிருந்த ஒருவர், தீயை அணைக்க முயன்றபோது உயிரிழந்தார். சிலர் அடையாளம் காண முடியாத அளவுக்குத் தீக்காயமடைந்திருந்தனர். சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். புகையால் இருமலும் ஏற்பட்டது. சிலர் கோமா நிலையில் இருப்பது போன்ற உணர்வை பெற்றனர்," என்றும் உயிர் பிழைத்த தொழிலாளி கூறியுள்ளார்.
பல மணி நேரத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள்
இதேவேளை, தீப்பரவலை கட்டுப்படுத்த, கோட்டே மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து 12 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், பல மணி நேரத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு இரண்டு மணி நேரம் தாமதமானதாக ஹோமாகம, கட்டுவன பகுதியை சேர்ந்த குடியிருப்பாளர்கள் நேற்று (21) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், அருகிலுள்ள ஹோமாகம பிரதேச சபையில் தீயணைப்பு வாகனங்கள் இருந்திருந்தால், இன்று இந்த விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயிருக்காது என்றும் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, கட்டுவான தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்