மாகாண சபைத் தேர்தல்களை வருட இறுதிக்குள் நடத்துக! அரசிடம் எதிரணிகள் கூட்டாக வலியுறுத்து
மாகாண சபைத் தேர்தல்களை இந்த வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிரணித் தலைவர்கள் ஒன்றிணைந்து வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் நேற்று(27.05.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே எதிரணிக் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மாகாண சபைத் தேர்தல்
மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடத்துக்குள் நடத்தப்படமாட்டாது என ஆளுங்கட்சியான ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் அண்மையில் அறிவித்திருந்தார்.
அரச தரப்பின் இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்தே, மாகாண சபைத் தேர்தல்களை இந்த வருட இறுதிக்குள் நடத்தியே தீர வேண்டும் என வலியுறுத்தி எதிரணித் தலைவர்கள் இந்தக் கூட்டணியை அமைத்துள்ளனர்.

இந்த ஊடக சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த எதிரணித் தலைவர்கள்,
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தடையாக இருக்கும் எல்லை நிர்ணயம் உள்ளிட்ட தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
புதிய தேர்தல் முறை சட்டச் சிக்கல்கள்
அத்துடன், புதிய தேர்தல் முறைமையில் சட்டச் சிக்கல்கள் நீடிக்குமாயின், காலதாமதங்களைத் தவிர்ப்பதற்காகப் பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலாவது மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

நீண்டகாலமாக மக்கள் பிரதிநிதிகள் இன்றி முடங்கியுள்ள மாகாண சபைகளுக்குத் தேர்தல்களை நடத்துவதன் மூலமே ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர்.