ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் தீவிரம் : அமைச்சரவையை கூட்டி முக்கிய ஆலோசனை
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தையின் மிக முக்கியமான கட்டத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் "பெரும்பாலும் பேசி முடிக்கப்பட்டுவிட்டது" என்று ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
கிழக்கு நேரப்படி காலை 11 மணிக்கு (16:00 GMT) தனது மூத்த உதவியாளர்களுடன் ட்ரம்ப் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஈரானின் அணு ஆயுதத் திறன்
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணு ஆயுதத் திறன் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கும் ஏதுவான ஒரு ஒப்பந்தத்தை தான் எட்டிவிடுவோம் என ட்ரம்ப் நம்பிக்கையுடன் உள்ளார்.
இதன்மூலம், அரசியல் ரீதியாக தனக்கு பின்னடைவை ஏற்படுத்திய இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து, தான் வெற்றி பெற்றுவிட்டதாக பிரகடனப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

இருப்பினும், டிரம்பின் இந்த முடிவு அவருக்கு ஒரு திருப்தியற்ற முடிவையே தரும் என்ற ஆபத்தும் உள்ளது. தற்போது உருவாகி வரும் ஒப்பந்தம் பல முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்காமல் தள்ளிப்போடுகிறது.
மேலும், ஈரானின் தீவிரப் போக்குடைய தலைவர்கள் இந்த மோதலில் இருந்து பலவீனமடைந்தாலும், இறுதியில் தைரியமடைந்தே வெளிவருவார்கள் என டிரம்பின் சொந்த ஆதரவாளர்கள் உட்பட பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கும் இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையிலும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக அமெரிக்க வாக்காளர்களின் மனநிலை மாறியுள்ளதாலும், குடியரசுக் கட்சியினர் கவலையடைந்துள்ள சூழலில் இந்த முக்கியமான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.