பிரித்தானியாவில் சில குழுக்களுக்கு மட்டும் அதிக ஆபத்து! - அதிர்ச்சி கொடுக்கும் அறிக்கை
கொரோனா தொற்று ஏற்படுவது மற்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதீத உடல் நலக்குறைவு ஏற்படும் ஆபத்து சில இனக்குழுக்களுக்கு மட்டும் அதிகமாக இருப்பதாக ஒரு முக்கிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'கோவிட் டிஸ்பாரிட்டீஸ் ரிப்போர்ட்' (Covid-disparities report) என்றழைக்கப்படும் அந்த ஆய்வறிக்கை பிரிட்டன் அரசால் கோரப்பட்டு, வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கையை தயாரிக்க ஒவ்வொரு கொரோனா அலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
பிரிட்டனில் வாழும் கருப்பின மற்றும் தெற்காசிய மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவர்களோடு நகரத்தில் போதிய வசதியற்ற வாழ்கை வாழ்பவர்களும் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள் சிக்கலானவை. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது மக்களின் உயிரைக் காக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உள்ளிட்டோரை முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்துவதுடன், அதுதான் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க சிறந்த வழி என்கிறார்கள் நிபுணர்கள்.
ஒருவரின் வயது மற்றும் அவருக்கு ஏற்கனவே இருக்கும் உடல்நலக் குறைவுகள் ஆகிய விஷயங்கள்தான் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயங்களாக இருக்கின்றன.
பிரிட்டனில் சில சிறுபான்மை இனக்குழுவினர் மத்தியில் மட்டும் அதிகப்படியான கொரோனா உயிரிழப்புகள் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கு மற்ற பல முக்கிய காரணிகள் உள்ளன.
அவ்வறிக்கையின்படி
- சுகாதாரப் பணியாளர்கள், டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் பணி காரணமாக அதிக கொரோனா பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
- குடும்ப உறுப்பினர்கள் அளவு அதிகமுள்ள - குறிப்பாக பல தலைமுறையினர் வாழும் வீடுகள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் வயதானோர் வாழும் வீடுகள் கொரோனா அபாயங்களை எதிர்கொண்டன.
- மோசமான காற்றுத் தரம், அதிக அளவிலான பற்றாக்குறையோடு, மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாழ்வோர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
முதல் கொரோனா அலையில், கொரோனா தடுப்பூசி புழக்கத்துக்கு வருவதற்கு முன், மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடைகள் போதிய அளவுக்கு கிடைக்காமல் இருந்தபோது, பணி சார்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என தரவுகள் கூறுகின்றன.
கொரோனாவின் இரண்டாவது அலையில் பள்ளிகள் எல்லாம் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, பல தலைமுறையினர் ஒன்றாக வாழும் வீடுகளில் வசிக்கும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
தற்போது இனக்குழுக்களில் உள்ள மிகப் பெரிய அபாயமே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததுதான் என டாக்டர் ராகிப் அலி சமர்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் அரசுக்கு கொரோனா மற்றும் இனக்குழு தொடர்பான சுயாதீன ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களில் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்றார் அவர்.
பொதுவாக வெள்ளை இன மக்கள் அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கொரோனா தொடர்பான இந்த வேறுபாடுகளைச் சமாளிக்க, அரசு இந்த விவரங்களைப் பயன்படுத்தும் என பிரிட்டன் அரசு கூறியுள்ளது.